திவ்யா எங்கள் மகளாக வீட்டுக்கு வரலாம்... மறுமணம் செய்து வைக்கவும் தயார்.. இளவரசன் தந்தை

ர்மபுரி: எங்களது மகனை மணந்த திவ்யாவின் முகத்தில் பார்க்கிறேன். அவர் எங்களது மகளாக எங்கள் வீட்டுக்கு வரலாம். அவர் விருப்பப்பட்டால் மறுமணம் செய்து வைக்கவும் தயாராக இருக்கிறேன் என்று இளவரசனின் தந்தை இளங்கோவன் கூறியுள்ளார். இளவரசன் மறைவால் அவரது குடும்பம் நிலை குலைந்து போயுள்ளது. பெற்ற மகனை பரிதாபமாக பறி கொடுத்துத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் பெற்றோர் இளங்கோவனும், அம்சவேணியும். இந்த நிலையில் திவ்யாவை தங்களது மகளாகப் பார்ப்பதாக உருக்கமாக கூறியுள்ளார் இளங்கோவன். இதுதொடர்பாக மாலைமலருக்கு அவர் அளித்துள்ள பேட்டி..

சாப்பிடவில்லை, தூங்கவில்லை என் மகன் இறந்தது முதல் கடந்த 4 நாட்களாக நான் சாப்பிடவில்லை. தூங்கவும் இல்லை. உறவினர்கள் வாங்கி கொடுக்கும் டீ மற்றும் தண்ணீரை குடித்து வாழ்க்கையை ஓட்டி வருகிறேன்.

கண்ணுக்குள் இருக்கிறான் இளவரசன் என் கண்ணுக்குள் என் மகன் இருக்கிறான். அவனது நினைவால் கதறி அழுது கொண்டே இருக்கிறேன். என் மனைவியும் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை.

திவ்யா எனது மகள் திவ்யா முகத்தில் எனது மகனை பார்க்கிறேன். அவர் விருப்பப்பட்டால் என் குடும்பத்தில் மகளாக வரலாம். அவர் என்னுடன் இருந்தால் என் மகன் அவர் வடிவில் வாழ்வதாக நான் கருதுவேன்.

திவ்யா படிக்கட்டும்.. நான் உதவுகிறேன் திவ்யா படிப்பை முடிக்க நான் உதவியாக இருப்பேன். அவர் படித்து முடித்து வேலைக்கு போய் சம்பாதிக்கலாம் என்றாலும் வேலைக்கு அனுப்ப தயார். அவர் விருப்பப்பட்டால் மறுமணம் செய்து வைக்கவும் தயாராக இருக்கிறேன்.

மகனின் நண்பன் மீது சந்தேகம் எனது மகன் சாவில் மர்மம் உள்ளது. அவர் சாவதற்கு முன்பு வரை அவருடன் இருந்த அவனது உயிர் நண்பர் பாரதி அவன் இறந்த பிறகு அஞ்சலி செலுத்த வரவில்லை. அவன் மூலம் தான் எனது மகன் இருக்கும் இடம் தெரிந்து அவனை தேடி கண்டுபிடித்து ஒரு மர்ம நபர் பார்த்து தாக்கி கொன்று இருக்கிறார்.

சதியைக் கண்டுபிடிக்க வேண்டும் இந்த கொலைக்கு காரணமானவர்களையும் இதற்கு பின்னணியில் சதித்திட்டம் தீட்டியவர்களையும் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மறு பிரேதப்பரிசோதனை வேண்டும் எனது மகனின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இதற்காக தர்மபுரி மாவட்ட கலெக்டர், எஸ்.பி. ஆகியோரை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன். நாளை சென்னையில் இருந்து 5 மருத்துவக் குழுவினர் தர்மபுரி வருகிறார்கள். அவர்கள் முன்னிலையில் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.

செல்போன் விவரம் தேவை எனது மகனின் செல் போன் எஸ்.பி.யிடம் உள்ளது. அதில் அவன் யார்-யாருடன் பேசினான் என்ற விவரத்தை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஆனால் அதுபற்றிய விவரத்தை போலீசார் என்னிடம் தெரிவிக்கவில்லை என்றார் இளங்கோவன்.

Comments