கூடங்குளம் மின்சாரத்தில் பங்கு கேட்டு தென் மாநிலங்கள்போட்டா போட்டி

"கூடங்குளம் அணுமின் நிலையத்தில், உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தையும், தமிழகத்துக்கு தரக்கூடாது' என, தென் மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்த மின்சாரத்தில், தங்களுக்கும் அதிக பங்கு தரவேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளன.

இதுதொடர்பாக, டில்லியில் நேற்று மத்திய அரசின் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:பலத்த எதிர்ப்புகளையும், தடைகளையும் தாண்டி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில், மின் உற்பத்தி
துவங்கியுள்ளது. ஆனாலும், முழுவீச்சில் உற்பத்தி துவங்க, இன்னும் சில நாட்களாகும். இங்கு உற்பத்தியாக உள்ள, மின்சாரம் அனைத்தையும், தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா உட்பட, பலரும், மத்திய அரசிடம் இதை வலியுறுத்தி வருகின்றனர்.


ஆந்திரா :

ஆனால், "கூடங்குளம் அணுமின் நிலையத்தில், உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தையும், தமிழகத்திற்கே வழங்கக் கூடாது' என, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதுதொடர்பான கோரிக்கை மனுக்களும், மத்திய அரசுக்கு வந்துள்ளன. இந்த விவகாரத்தில், முன்னணியில் நிற்பது ஆந்திர மாநிலமே.கூடங்குள மின்சாரத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, 2001ல், ஒப்பந்தம் ஒன்று போட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில், இரண்டு பிரிவுகளில், உற்பத்தியாக உள்ள, 2,000 மெகா வாட் மின்சாரத்தில், 540 மெகாவாட்டை, ஆந்திராவுக்கு தர, மத்திய அரசு முன்வந்தது.ஆனால், "கிருஷ்ணா - கோதாவரி படுகையில், நிறைய எரிவாயு கிடைப்பதால், எங்களுக்கு கூடங்குளம் மின்சாரத்தில் பங்கு வேண்டாம்' என, அப்போது ஆந்திரா கூறிவிட்டது.தற்போது, கிருஷ்ணா - கோதாவரி படுகையில், எரிவாயு உற்பத்தி குறைந்து, நின்று போகும் அளவுக்கு, நிலைமைகள் உள்ளதால், கூடங்குளம் மின்சாரத்தில், தங்களுக்கு பங்கு தர வேண்டும் என, ஆந்திரா வலியுறுத்தி வருகிறது.
360 மெகா வாட்:


அதேபோல், கர்நாடக அரசும், "கூடங்குளம் மின்சாரம் அனைத்தையும், தமிழகத்திற்கே வழங்கக் கூடாது. எங்களுக்கும், 360 மெகா வாட் மின்சாரம் தர வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளது.கூடங்குளத்தில், விரைவில் உற்பத்தியாக உள்ள, 1,000 மெகா வாட் மின்சாரத்தில், தற்போதைய நிலவரப்படி, 440 மெகா வாட் தமிழகத்துக்கு வழங்கப்பட உள்ளது. இது மேலும் அதிகரிக்கப்பட்டு, 600 மெகா வாட் வரை, தமிழகத்துக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.கேரளாவுக்கு, 100 மெகா வாட்டும், புதுச்சேரிக்கு, 35 மெகாவாட்டும், கர்நாடகாவுக்கு, 225 மெகா வாட்டும் வழங்குவது என, தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது போதாது என்று கூறி, மத்திய அரசுக்கு, கர்நாடக காங்., அரசு நெருக்கடி கொடுக்கத் துவங்கியுள்ளது.தென் மாநிலங்களைப் பொறுத்தவரை, ஆந்திராவில், 20 சதவீதமும், கர்நாடகாவில், 17.8 சதவீதமும், தமிழகத்தில், 19.4 சதவீதமும், மின் பற்றாக்குறை உள்ளது. எனவேதான், கூடங்குளம் அணுமின் நிலைய மின்சாரத்திற்காக, தென்மாநிலங்கள், போட்டா போட்டியில் இறங்கிஉள்ளன.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments