புராண காலத்தை சேர்ந்தது: மந்தாகினி ஆற்றில்
அமைந்துள்ள கேதார்நாத் சிவன் கோவில், புராண காலத்தை சேர்ந்தது என்று
சிலரும், 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது என, பிறரும் கூறுகின்றனர். அந்த
கோவிலை, ஆதிசங்கரர் இப்போதைய வடிவில் அமைத்தார் என்ற கருத்தும்
நிலவுகிறது.இந்துக்களின் புனித தலங்களில் முக்கியமான அந்த கோவிலில், கடந்த
மாதம், 17ம் தேதி முதல், இப்போது வரை பூஜைகள் நடைபெறவில்லை. கோவிலும்
திறந்து கிடைக்கிறது; உட்புறம் சகதிக்காடாக காட்சியளிக்கிறது; வெளிப்புறம்,
அணுகமுடியாத அளவிற்கு மிக மோசமாக உள்ளது.அந்த கோவிலில், பஞ்ச
பாண்டவர்களின் ஐந்து சிலைகள், வெள்ளியால் ஆன, மூலஸ்தான வேலைப்பாடுகள்,
தாமிரத்தால் ஆன நந்திச் சிலை, வெண்கலச் சிலைகள் மற்றும் கல்லால் ஆன மூலவர்
சிலை என, காலம் காலமாக வழிபட்ட பல சிலைகள், கேட்பாரற்று
கிடக்கின்றன.கேதார்நாத் பகுதியில், ஆங்காங்கே சிதறிக்கிடந்த பிணங்களின்
விரல்களை வெட்டி எடுத்து, அவற்றிலிருந்த மோதிரங்களை திருடிய கும்பலையும்,
லட்சக்கணக்கில், பணத்துடன் சுற்றித் திரிந்த திருடர்கள் பலரையும்
ராணுவத்தினர் பிடித்துள்ளனர்.
ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய் வருமானம் வரும் கேதார்நாத் கோவிலின் பணம்,
அருகில் உள்ள, ஸ்டேட் பாங்க் கிளையில் டெபாசிட் செய்யப்படும். வெள்ளத்தில்
அந்த வங்கியும் சேதமடைந்துள்ளது; அதன் இரும்பு பெட்டகத்தை திருடவும்
கும்பல் முயன்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.அந்தப் பகுதியின் போலீஸ் ஐ.ஜி.,
அமித் சின்கா கூறுகையில், ""கோவிலின் உள்ளே சிலைகளை அகற்ற சிலர்
முயன்றுள்ளது போல் தெரிகிறது; சிலையை நகர்த்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியா
அல்லது இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பா என தெரியவில்லை, என்றார்.
இதனால் கோவில் சிலைகளையும் பொருட்களையும் பாதுகாக்க, போதிய பாதுகாப்பு
ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனினும், கோவில்
பகுதியை எளிதில் அணுக முடியாத அளவிற்கு நிலைமை உள்ளதால், அங்கிருந்து
எதையும் எடுத்துச் செல்ல முடியாது என, போலீசார்கூறுகின்றனர்.மேலும்,
அப்பகுதி மக்கள், கேதார்நாத் சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள்;
அவர்கள், எக்காலத்திலும், கோவில் பொருட்களை திருடவோ, திருட்டு கொடுக்கவோ
விடமாட்டார்கள் என கூறப்படுகிறது. இதற்கிடையே, உத்தரகண்ட் பேரழிவில்
சிக்கி, 1,000 பேர் இறந்துள்ள நிலையில், 3,000 பேர் காணாமல் போயுள்ள
நிலையில், ஏராளமான இளம்பெண்கள், சிறுமிகள் அனாதைகளாக ஆகியுள்ளனர்.
அத்தகையவர்கள், மோசடி நபர்களின் கைகளில் சிக்க வாய்ப்பு உள்ளதாக, சிலர்
அச்சம் தெரிவித்துள்ளனர்.
உறவினர்கள் தவிப்பு: உத்தரகண்ட் சோகத்தில் தங்கள்
உறவினர்களை காணாமல் தவிப்பவர்கள், அரசிடம் இருந்து பதில் கிடைக்காமல்
தவித்து வருகின்றனர். காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை, உத்தரகண்ட்
அரசிடம் பதிவு செய்தும், இது வரை, அரசிடம் இருந்து எந்த பதிலும் வராததால்,
சிலர், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற பகுதிகளுக்கு சென்று தேடலாம் என முடிவு
செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Comments