புதுடில்லி: எதிர்வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய
ஜனநாயக கூட்டணியின் அதிகாரப்பூர்வ பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர்
நரேந்திர மோடி அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த
அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது
தொடர்பாக டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாவது:
ஆர்.எஸ்.எஸ்.,
அமைப்பின் 3 நாள் மாநாடு மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் நடந்து வருகிறது.
இந்த மாநாட்டில் எதிர்வரும் லோக்சபா தேர்தலில், குஜராத் முதல்வர் நரேந்திர
மோடியை, தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்துவது
குறித்து தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. மோடியின் தலைமையை எதிர்க்கும்
பா.ஜ., தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியும் இந்த மாநாட்டில் நடந்து
வருவதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம், பா.ஜ., தேர்தல்
பிரசாரக்குழு தலைவராக மோடி நியமிக்கப்பட்டதன் மூலம் அவர் பிரதமர்
வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கான முயற்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக
கூறப்பட்டது. எனினும் கட்சியின் மூத்த தலைவரான அத்வானி, மோடிக்கு எதிராக
வெளிப்படையாக பேசியதும், அவரது நியமனத்தை முன்னிட்டு தனது பதவியை ராஜினமா
செய்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து
இவ்விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தலையிட்டு அத்வானியை
சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. இதில் அவர் சமாதானமடைந்ததைத்
தொடர்ந்து, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது. அதே வேளையில், பா.ஜ.,வில் அத்வானிக்கு உரிய முக்கியத்துவம்
அளிக்கப்படும் என்றும் ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் உத்திரவாதம்
அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இம்மாத இறுதியில் இது
தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் லோக்சபா தேர்தலில், உ.பி., மாநிலம் வாரணாசி தொகுதியில் இருந்து மோடி
போட்டியிடுவார் என தெரிகிறது. தற்போது இந்த தொகுதியில் எம்.பி.,யாக உள்ள
முரளி மனோகர் ஜோஷியையும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சமாதானப்படுத்தியுள்ளதாக
கூறப்படுகிறது.
இதன் மூலம் எதிர்வரும் லோக்சபா தேர்தலில்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பிரதமர் வேட்பாளராக
அறிவிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படும் ராகுலுக்கும், மோடிக்கும் இடையே
நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில், குஜராத் மாநிலத்தில் கடந்த 12
ஆண்டுகளாக சிறந்த முறையில் நடந்து வரும் நிர்வாகத்தை முன்னிறுத்தி மோடி
தனது பிரசாரத்தை நடத்துவார் என கூறப்படுகிறது.
Comments