
இலங்கையில் 13–வது சட்ட திருத்தத்தை நீர்த்துப் போக செய்யும்
நடவடிக்கைகளில் இலங்கை ஈடுபட்டு வருகிறது. ஈழ தமிழர்கள் உரிமை பெற முதல்வர்
ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜூலை 14–ந் தேதி கடிதம் எழுதினார்,
அந்த கடிதத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம் எழுதி உள்ளார்.
ஜனநாயகம் பரவலாக்க: இது குறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் 13–வது சட்ட திருத்தத்தை திரும்பப் பெறவோ அல்லது நீர்த்து போக
செய்யவோ அந்நாட்டு அரசு எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடாத வகையில் இந்திய
அரசு கடும் அழுத்தம் கொடுக்க எல்லா நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில்
ஜனநாயகம் பரவலாக்கப்பட வேண்டும் என்றும் முதல்– அமைச்சர் ஜெயலலிதா
வலியுறுத்தி இருந்தார். மேலும் இலங்கையில் மிக நீண்ட காலமாக கடும்
பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சிறுபான்மை தமிழர்களுக்கு ஆதரவளிக்கும்
வகையில் இந்திய அரசு உறுதியான, வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கடிதத்துக்கு நன்றி !
முதல்வரின் அந்த கடிதத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் பதில் கடிதம் எழுதி
அனுப்பியுள்ளார். ஜூலை 16–ந் தேதி குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்ட அந்த
கடிதத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது; இலங்கையில் 13–வது சட்ட திருத்தம்
தொடர்பாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தாங்கள் 14–ந்தேதி எழுதிய
கடிதத்துக்கு நன்றி. இலங்கையில் தமிழர்களுக்கும் அதிகாரம் பகிர்ந்து
அளிக்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப் பாட்டில் எந்த மாற்றமும்
இல்லை. இலங்கையில் எல்லா சமுதாயத்தினரும் குறிப்பாக ஈழ தமிழர்கள் ஐக்கிய
இலங்கை என்ற நிலைக்கு உட்பட்டு சுயமாக செயல்பட வழி காணும் சூழ்நிலையை
உருவாக்க வேண்டும் என்று இந்தியா நீண்ட நாட்களாக கூறி வருகிறது. இந்த
விஷயத்தில் தமிழர்களின் நலன் காக்க இந்தியா தொடர்ந்து முயற்சி
மேற்கொள்ளும்.
இவ்வாறு பிரதமர் பதில் அளித்திருப்பதாக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Comments