ஆரம்பத்திலிருந்தே ஏதோ ஒரு குறையோடே காட்சிகள் நகர்கின்றன.
பாரதிராஜாவின் படங்களுக்கே உரிய உணர்வுப்பூர்வமான காட்சிகளோ, அழகியலோ,
வசனங்களோ, நுட்பமான நளினங்களோ இந்தப் படத்தில் ஒரு காட்சியில்கூட இல்லை.
ஒரு சாம்பிள்... நாடோடித் தென்றலில் சோத்துக்கு தொட்டுக் கொள்ள ரஞ்சிதாவின்
கைவிரல்களை பயன்படுத்தியபோது நம்மால் ரசிக்க முடிந்தது. ஆனால், இந்தப்
படத்தில் கார்த்திகாவின் அல்லது லட்சுமணனின் நகங்களைக் கடித்து அதை
கஞ்சிக்கு தொட்டுக் கொள்வதாகக் காட்டியிருப்பது குமட்டலைத்தான் தருகிறது!
அதேபோல ஏற்கெனவே பாரதிராஜாவின் படங்களில் பார்த்த நிறைய காட்சிகளை இந்தப்
படத்தில் மீண்டும் பார்க்க முடிகிறது. அன்னக்கொடியின் தாய் இறந்துபோனது
தெரிந்ததும், காதலியைப் பார்க்க வேகமாக வருகிறான் கொடிவீரன்... அப்போது
கல்யாணமாகி புருஷனுடன் மாட்டு வண்டியில் போய்க்கொண்டிருப்பாள் அன்னக்கொடி.
இதை வேதம் புதிதிலேயே கொஞ்சம் வேறு மாதிரி காட்டியிருப்பார்.
மனோஜ்குமார், மீனாள், ரமா பிரபா, கொடிவீரன் தந்தையாக வருபவர், அந்த
போலீஸ்காரர்... கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
சாதி... இதை வைத்து அன்றைய நாட்களில் கிராமங்களில் நடந்த கொடுமைகள், அதை
எதிர்த்து போரிட்டு இழப்புகள் தாங்கி வாழ்க்கையில் இணைந்த ஒரு காதல்
ஜோடி... பாரதிராஜா எடுக்க நினைத்த கதை இதுதான். இதை அவர் எந்த சமரசமும்
இல்லாமல் தன் பாணியில் எடுத்திருந்தால், இன்னொரு அழகிய படைப்பாக
வந்திருக்கும். சாதீயம் தலைவிரித்தாடும் இந்த நேரத்தில், அது சமூகத்துக்கான
ஒரு மருந்தாகக் கூட இருந்திருக்கும்.
ஆனால் நல்ல காட்சிகள், நல்ல வசனங்கள், நல்ல பாடல், நல்ல இசை என்று எதையுமே
குறிப்பிட முடியாத பரிதாபத்துக்குரிய படமாக அன்னக் கொடி வந்திருக்கிறது.
பாரதிராஜா என்ற தனிமனிதனின் கருத்துகள் மீது ஆயிரம் விமர்சனங்கள்
இருந்தாலும், பாரதிராஜா என்ற கலைஞனின் படைப்புகளை ரசித்தவன் என்ற முறையில்,
அவரது இந்த வீழ்ச்சியை பரிதாபமாகவே பார்க்க முடிகிறது. இன்னொரு சரியான
கூட்டணியோடு, ரசனையில் கொஞ்சம் மேம்பட்டு நிற்கும் உங்கள் ரசிகர்களை
எதிர்கொள்ளுங்கள் இயக்குநரே..!
Comments