கிரானைட் மோசடி: பி.ஆர்.பி. மீது புதிய வழக்கு; மதுரை புது கலெக்டரும் அதிரடி!

கிரானைட் மோசடி: பி.ஆர்.பி. மீது புதிய வழக்கு; மதுரை புது கலெக்டரும் அதிரடி!மதுரை: கிரானைட் குவாரி மோசடி தொடர்பாக பி.ஆர்.பி நிறுவனத்தின் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி மீது புதிய வழக்குகள் பதிவு செய்ய மதுரை மாவட்ட கலெக்டர் சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். இது பி.ஆர்.பி ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்ட விரோதமாக அரசு நிலங்களை ஆக்கிரமித்து கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டு வந்த பி.ஆர்.பி. மீது அதிரடி நடவடிக்கை எடுத்த மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா சமீபத்தில் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். கலெக்டர் மாற்றத்துக்கு முழுக்காரணம் பி.ஆர்.பி. மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்தது தான் என்றும் அதற்கு ஆளுங்கட்சியின் நான்கு எம்.எல்.ஏக்கள், முதல்வரிடம் கொடுத்த பொய்ப் புகார்தான் காரணம் என்றும் பேசப்பட்டது. இதனையடுத்து புது கலெக்டராக எல்.சுப்ரமணியன் கடந்த ஞாயிறன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்றுக் கொண்ட மூன்றாவது நாளே அதிரடி உத்தரவு பிரப்பித்து பி.ஆர்.பி. மீது மேலும் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலமோசடி, மிரட்டல் மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் வெங்கட சுப்பு, கீழவளவு அருகே சோலைராஜன் என்பவரிடம் 10 ஏக்கர் நிலத்தை லீசுக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த நிலத்தையும், அருகிலிருந்த அரசு நிலத்தையும் பி.ஆர்.பி.யும், சிந்து கிரானைட் செந்தில்குமாரும் வளைத்து போட்டது மட்டுமல்லாமல் நிலத்தின் உரிமையாளரையும் மிரட்டியுள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நில அபகரிப்பு, மிரட்டல் விடுத்தல் போன்ற பிரிவுகளில் கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புது கலெக்டர் கட்சிக்காரர்கள் சொல்வதைக்கேட்டு நடந்து கொள்வார் என்றும், இனி கிரானைட் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய கலெக்டரின் இந்த அதிரடி உத்தரவு பி.ஆர்.பி. ஆதரவு ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments