இலங்கை தமிழர் விஷயத்தில் துணிச்சல் நடவடிக்கை தேவை: பிரதமருக்கு ஜெ., கடிதம்

சென்னை :"இலங்கையில் பாரபட்சத்திற்கு இலக்காகியிருக்கும், சிறுபான்மை தமிழர்களுக்கு ஆதரவாக, மத்திய அரசு துணிச்சலான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பார்வையளாராக இருக்கக் கூடாது' என்று, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் எழுதியுள்ள கடித விவரம்:இலங்கை தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசியல் சட்டத்தின்,
13 வது பிரிவை நீர்த்துப் போகச் செய்யும் அல்லது ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளில், இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது தொடர்பாக, இந்த கடிதம் எழுதுகிறேன்.இலங்கையில் இறுதி கட்ட போரில், ராணுவம் பலரை கொன்று குவித்த பின்பும், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையில், அந்த நாட்டு அரசு ஈடுபட்டு வருவது குறித்தும், நான் ஏற்கனவே கடிதத்தில் தெரிவித்திருந்தேன். சிங்களர்களுக்கு இணையான, சம உரிமை மற்றும் அந்தஸ்தை வழங்குவது தொடர்பான அடையாளங்கள் ஏதும் தென் படவில்லை.இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவதுடன், மனித உரிமை மீறல்களும் தொடர்கின்றன. ஆனால், தன்னாட்சி உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை மாற்றம் செய்யும், நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.

கடந்த, மார்ச், 27ம் தேதி, தமிழக சட்டசபையில், "தனி ஈழம்' தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் படி, "தனி ஈழம்' உரிமை அங்குள்ள தமிழர்களுக்கு தரப்பட வேண்டும் என்பதற்காக, உலகத் தமிழர்களிடையே, கருத்துக் கணிப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டது. இன்றைய நிலையை நோக்கும் போது, இலங்கை அரசு, இடம் பெயர்ந்த மக்களை, குடியமர்த்துதல், இலங்கை தமிழர்கள் வாழ்க்கையை சீரமைப்பதிலும் அக்கறை காட்டுமா என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது.சட்டத்தை திருத்த, பார்லிமென்ட் தேர்வுக்குழுவிற்கு, அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே பரிசீலனைக்கு அனுப்ப உள்ளார். வடக்கு மாகாண கவுன்சில் தேர்தல்கள் வரும், செப்டம்பர் மாதம் நடக்க உள்ளது. இந்நிலையில், இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்ஷே, அரசியல் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று, பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்.சமீபத்தில், இலங்கையின் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷே, நம் வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்த போது, இதுகுறித்து விளக்கியுள்ளதாக தெரிகிறது.

கடந்த, 1987ம் ஆண்டில் உருவான, இந்தோ - இலங்கை ஒப்பந்தப்படி, 13வது சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது.இதன் அடிப்படையில், இலங்கை தமிழர்களுக்கு, உரிமை, பாதுகாப்பு, மரியாதை ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆனால், இந்த அதிகாரங்களை இலங்கை அரசு, தமிழர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.இந்த நேரத்தில், இந்தியா செயலற்ற பார்வையாளராக இருந்து விட முடியாது. இலங்கைத் தமிழர்களின் வாழ்வையும், சுதந்திரத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இலங்கை அரசின், சட்டத் திருத்தத்தை ரத்து செய்தால், அது தமிழர்களின் வாழ்வுக்கும், சுதந்திரத்திற்கும், பெரும் அச்சுறுத்தலாக அமையும்.மேலும், 13 வது சட்டத்திருத்தத்தை, நீக்கவோ, நீர்த்துப் போகச் செய்யவோ, இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, என்பதற்கு, மத்திய அரசு இலங்கை அரசின் மீது நெருக்கடி கொடுக்க வேண்டும்.இலங்கையில், பாரபட்சத்திற்கு இலக்காகியிருக்கும், சிறுபான்மை தமிழர்களுக்கு ஆதரவாக, மத்திய அரசு துணிச்சலான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

Comments