மதுரை: மதுரை மாவட்டத்தில் கிரானைட் கொள்ளையர்களுக்கு எதிரான அதிரடி
நடவடிக்கைத் தொடரும் என்று புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள
எல்.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
கிரானைட் குவாரி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதிரடி
கலெக்டர் என்று பெயர் பெற்றவர் அன்சுல் மிஸ்ரா. ஆனால் அரசியல்
தலையீட்டினால் அவர் இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தின் புதிய கலெக்டராக எல்.சுப்பிரமணியன்
நியமனம் செய்யப்பட்டார். ஞாயிறன்று கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட
அவருக்கு வாழ்த்து தெரிவித்து பொறுப்புகளை ஒப்படைத்தார் முன்னாள் கலெக்டர்
அன்சுல் மிஸ்ரா.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் சுப்ரமணியன் கூறியதாவது:
வரலாற்று சிறப்புமிக்க, பாரம்பரியமிக்க மதுரை மாநகரில் என்னை மாவட்ட
கலெக்டராக நியமித்த தமிழக முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் எனது
நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் எதிர்பார்ப்பது போலவே
நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடைபெறும். பொதுமக்களின் கோரிக்கை
மனுக்கள் மீது உடனுக்குடன் குறிப்பிட்ட காலத்திற்குள் உரிய நடவடிக்கை
எடுக்கப்படும்.
அரசு திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைவதற்கு உரிய நடவடிக்கை
எடுக்கப்படும்.முன்னாள் கலெக்டர் மூலம் மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு
என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அவைகள் அனைத்தும் தொடரும்.
தமிழக அரசின் வழிமுறைகளின் படி, கிரானைட் கொள்ளை மீது நடவடிக்கை தொடரும்"
என்றும் கலெக்டர் சுப்ரமணியன் கூறினார்.
Comments