மதுரை ராணி மங்கம்மாள் "பேலஸ்' இடிப்பு : அ.தி.மு.க., பிரமுகர் அடாவடி

மதுரை:மதுரையில், புராதன சின்னமாக கருதப்படும் ராணி மங்கம்மாள் "பேலஸை' இடித்த, அ.தி.மு.க., பிரமுகரின் செயல், மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வடக்கு ஆவணி மூலவீதியில், மீனாட்சி அம்மன் கோயில் அருகே, ராணி மங்கம்மாள் "பேலஸ்' உள்ளது. 1689ல், கருங்கற்களால் கட்டப்பட்ட அக்கட்டடம், தற்போது பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் கீழ்இயங்கும், பெரியாறு, வைகை வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர்
அலுவலகமாக செயல்படுகிறது. புராதன சின்னமான அக்கட்டத்திற்கு, பாதிப்பு வராமல் பொதுப்பணித் துறையினர் பாதுகாத்து வருகின்றனர். கட்டடத்தின் பின்புறம், மாநகராட்சி அவ்வை பள்ளியின் விரிவாக்க கட்டடம் உள்ளது.இந்நிலையில், தி.மு.க., விலிருந்து அ.தி.மு.க., வில் இணைந்த, "மார்க்கெட்' செல்லத்துரை என்பவர், மங்கம்மாள் "பேலஸ்' கட்டடத்தை இடித்துள்ளார். மங்கம்மாளை சிறை வைத்த கட்டடத்தின் ஒரு பகுதி மேற்கூரை தகர்க்கப்பட்டது. பின்புறம், அவ்வை பள்ளி மாணவிகள் கழிப்பறைக்கு தடுப்பாக இருந்த சுவர் முழுவதும், இடிபட்டுள்ளது. கருங்கற்களால் ஆன நிறைய தூண்கள், துண்டுகளாக உடைபட்டுள்ளன. சத்தம் கேட்டு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், இடிக்கும் பணியை நிறுத்தினர்.

இதுகுறித்து, கண்காணிப்பு பொறியாளர் ராஜேஷிடம் தெரிவிக்கப்பட்டது. அவரது அறிவுறுத்தல் படி, விளக்குத்தூண் போலீசாரிடம் புகார் செய்தனர். நேற்று காலை, சேதமடைந்த பகுதி முழுவதையும், பொதுப்பணித்துறையினர் வீடியோ பதிவு செய்தனர். அங்கு வந்த "மார்க்கெட்' செல்லத்துரை, "தனக்குரிய இடத்தை தான் இடித்ததாக,' அதிகாரிகளிடம் தெரிவித்தார். "இது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பகுதி,' என, அதிகாரிகள் கூறியபோது, "யார் சொன்னது... மாநகராட்சி எனக்கு வழங்கியதை, பொதுப்பணித்துறைக்கு உரியது என, நீங்கள் எப்படி சொல்வீர்கள்?' என, வாக்குவாதம் செய்தார். பின், கண்காணிப்பு பொறியாளர் அறைக்குச் சென்ற "மார்க்கெட்' செல்லத்துரை, சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடித்தினார்.கண்காணிப்பு பொறியாளர் ராஜேஷ், ""மங்கம்மாள் "பேலஸ்' இடிக்கப்பட்ட போது, ஊழியர்கள் போன் செய்தனர். போலீசில் புகார் செய்ய கூறினேன். இடிபட்ட பகுதியை சரிசெய்து தருவதாக, மார்க்கெட் செல்லத்துரை கூறினார். பொதுப்பணித்துறை "கட்டடம்' பிரிவு உயரதிகாரிகளுக்கு, இதுகுறித்து கூறியுள்ளேன். அவர்கள் தான், நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

"மார்க்கெட்' செல்லத்துரை, ""எனக்கு சொந்தமான இடத்தில், கட்டடம் கட்ட இடித்தேன். மாநகராட்சி வழங்கிய ஆவணங்கள் என்னிடம் உள்ளன. "பேலஸ்' கட்டடத்தின் ஒரு பகுதியை, வேலையாட்கள் தெரியாமல் இடித்து விட்டனர்,'' என்றார்.

மேயர் ராஜன் செல்லப்பா, ""மார்க்கெட் செல்லத்துரை அ.தி.மு.க.,வில் எந்த பொறுப்பிலுமில்லை. தனித்து செயல்படுகிறார். மாநகராட்சி, அவருக்கு வழங்கியதாக கூறும் ஆவணங்களை சரிபார்த்த பிறகு தான், கருத்து கூற முடியும். தவறு யார் செய்திருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


இடிபாட்டில் சிக்கிய ஆவணங்கள் :

மங்கம்மாள் "பேலஸ்' கட்டடம் இடிபட்ட போது, பொதுப்பணித்துறையின் ஆவணங்கள், இடிபாடுகளில் சிக்கின. பெரியாறு, வைகை பாசனம் குறித்து, "தேனி மாவட்டம் பெரியகுளம், கம்பம், மதுரை பெரியாறு வைகை டிவிஷன், மதுரை 7வது டிவிஷன், பி.எம்.சி., மேலூர் உள்ளிட்ட டிவிஷன்களுக்கு வழங்கப்படும் பதிவு ஆவணங்கள் அவை. ஆவணங்கள் அடிக்கி வைத்திருந்த மர அலமாரிகளும் உடைந்து போயின. சேதத்தின் மதிப்பு, இதுவரை கணக்கிடப்படவில்லை.
ராணி மங்கம்மாள் "பேலஸ்' சிறப்பு :


மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கருக்கு பின், மகன் இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் கி.பி.1659ல் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். நான்கு மாதங்களில் அவர் இறந்துபோக, அவரது மகன் சொக்கநாத நாயக்கர், 14 வயதில் மன்னராக முடிசூடி, 23 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். கி.பி.1682ல் இறந்தார். அவரது மனைவியே ராணி மங்கம்மாள். தந்தை மறைவுக்கு பின், மங்கம்மாளின் மகன் மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர், 7 ஆண்டுகள் ஆட்சி புரிந்த நிலையில், அம்மை நோயால் இறந்தார்.அவரது மனைவி முத்தம்மாள் உடன்கட்டை ஏறினார். இவர்களது மகன் விஜயரங்கசொக்கநாதர். குழந்தையாக இருந்ததால், மன்னராக பட்டம் சூட்டி, ஆட்சி பொறுப்பை மங்கம்மாள் கவனித்தார். கி.பி.1689 - 1709 வரை, அவரது ஆட்சி காலத்தில் பெருமை சேர்த்தார். இறுதியில், அவரது சிறைக்காலம், இடிக்கப்பட்ட மங்கம்மாள் "பேலஸ்' கட்டடத்தில் தான் நிறைவடைந்தது. ஆங்கிலேயர் காலத்தில், சிறை அலுவலகமாக இப்பகுதியும், அருகில் உள்ள பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதி சிறையாகவும் செயல்பட்டது. சிறப்புகள் இத்தனை இருக்கும் போது, சிதைக்கப்பட்டதை எப்படி ஏற்க முடியும்?

Comments