தொடரும் என்.எல்.சி தொழிலாளார் போராட்டம்: 9ம் தேதி முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு

நெய்வேலி: கடந்த 3ம் தேதி தொடங்கிய என்.எல்.சி தொழிலாளர் போராட்டத்தால் நெய்வேலியில் மின் உற்பத்தி படிப்படியாக குரைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் 9ம் தேதி முற்றுகைப் போராட்டம் செய்ய இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு, நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தது. அதனை எதிர்த்து போராட்டத்தில் குதித்தனர் என்.எல்.சி தொழிலாளர்கள்.
 
இவர்கள் போராட்டத்திற்கு தடை விதித்தது சென்னை ஹைகோர்ட். ஆனால், தடை மீறி கடந்த 3ம் தேதி போராட்டத்தில் குதித்தனர் தொழிலாளர்கள். வேலை நிறுத்தப் போராட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் ஊழியர்கள் சங்கம் மற்றும் 15 தொழிற்சங்கங்களை சேர்ந்த 27 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால், பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த 4 ஆயிரத்து 500 பணியாளர்கள் மட்டும் பாதுகாப்புடன் பணிக்கு சென்று வருகிறார்கள். இவர்களின் போராட்டம் இன்றோடு 5வது நாளை எட்டியுள்ள நிலையில், வரும் 9ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார் தொ.மு.ச தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 
மேலும், இது குறித்து அவர் தெரிவித்ததாவது, ‘என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதை கண்டித்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கடந்த 10 நாட்களாக பல கட்ட போராட்டத்தை நடத்தி வந்தோம். இன்று தொடர்முழக்க போராட்டத்தை நடத்துகிறோம்.வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்காமல் பணிக்கு செல்லும் நிலத்தடி நீர் கட்டுப்பாட்டு துறை(ஜி.டப்ளியூ.சி.) தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக பணியில் இருந்து வெளியேற வேண்டும்.
 
போராட்டத்தின் அடுத்த கட்டமாக வருகிற 9-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 5 மணிக்கு 1-வது அனல்மின் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மிகப்பெரிய முற்றுகை போராட்டம் நடத்துவோம். இப்போராட்டமானது பணியில் உள்ள அதிகாரிகள் வெளியே வரும் வரையில் நடைபெறும்' என .இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments