சிவகங்கை: நூறாவது நாள் படத்தில் பெண்ணைக் கொன்று சுவரில் புதைத்து
சிமென்ட் போட்டு பூசி விடுவது போன்ற காட்சி வரும். அதே பாணியில் தற்போது
சிவகங்கை அருகே ஒரு சிறுமியைக் கொன்று சுவரில் போட்டு பூசிய சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை இந்திரா நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (36). திருப்பூரில் பனியன்
நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி உஷா (30) பூ வியாபாரி.
இவர்களுக்கு அஜய் (14) என்ற மகனும், அக்ஷயா (8) என்ற மகளும் உள்ளனர்.
அக்ஷயா மனநிலை குன்றிய குழந்தை. தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து
வந்தார். கடந்த 4ம் தேதி மாலை வெளியே சென்ற அக்ஷயாவை காணவில்லை. இது
குறித்து அவரது தாய் உஷா சிவகங்கை டவுன் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
அக்ஷயா வீட்டின் அருகே ஒரு அமைப்பின் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில்
இருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அருகில்
இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அந்த அலுவலகத்திற்குள் சென்று பார்த்தனர். அப்போது சமையல் அறையில்
வாஷ்பேசின் கீழே உள்ள பகுதியில் புதிதாக சுவர் எழுப்பப்பட்டிருந்தது. அந்த
சுவரில் இருந்து ரத்தம் வெளியேறிய வண்ணம் இருந்தது. இதையடுத்து சுவர்
இடிக்கப்பட்ட போது, உள்ளே ஒரு சாக்கு பையில் சிறுமியின் பிணம் இருந்தது.
இதைப் பார்த்து அனைவரும் அதிர்ந்தனர்.
அந்த சிறுமி தனது மகள்தான் என்று கதறி அழுதபடி உஷா அடையாளம் காட்டினார்.
இதையடுத்து உடலை மீட்ட போலீஸார் அதை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி
வைத்தார்.
அந்த அலுவலகத்தில் தங்கிப் பணியாற்றிய அமல்ராஜ் என்பவரை தற்போது போலீஸார்
இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து
அமல்ராஜ் கொலை செய்திருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த அமல்ராஜ் வினோதமான, அசிங்கமான பல பழக்க வழக்கங்களை உடையவராம். அதாவது
ஜட்டியுடன் வெளியில் அடிக்கடி வருவாராம். இதனால் மக்கள் புகார்கள் கூறவே
அந்த அமைப்பானது, அமல்ராஜை வேலையிலிருந்து நீக்கியுள்ளனர். ஆனால் அந்த
அமைப்பின் நிர்வாகிகள் மாலையில் அலுவலகத்தை விட்டுப் போனதும், அவர்கள்
சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டுப் போய் விடுவார்களாம். அமல்ராஜ்
போய் சாவியை வாங்கி உள்ளே தங்கிக் கொள்வாராம்.
எனவே இவர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் நம்புகிறார்கள்.
Comments