சிவகங்கை: சிவகங்கையில் 8 வயது சிறுமி மர்மமான முறையில் கொலை
செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த லட்சுமணன், உஷாராணி தம்பதியரின் 8
வயது மகள் அக்ஷயா. கடந்த 4ஆம் தேதி பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய
அக்ஷயா, வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்திருக்கிறார். பின்னர் சிறிது
நேரம் கழித்து அக்ஷயாவை பெற்றோர் தேடியபோது காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். எங்கு
தேடியும் அக்ஷயா கிடைக்காததால் உடனே போலீசில் புகார்
கொடுத்திருக்கிறார்கள்.
இவர்களது பக்கத்து வீட்டில் சூப் கடை வைத்திருக்கும் அமல்ராஜ் என்பவர்
வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக அமல்ராஜ் வீட்டு பூட்டியபடியே
இருந்திருக்கிறது. இன்று காலை அமல்ராஜ் வீட்டில் இருந்து துர்நாற்றம்
வீசியதை அடுத்து சந்தேகம் அடைந்த அக்ஷயாவின் பெற்றோர்கள், போலீசில்
தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அமல்ராஜின்
வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்திருக்கிறார்கள்.
அப்போது, வீட்டின் சமையல் அறையில் சிறிய பள்ளம் தோண்டப்பட்டு அதில் சிறுமி
அக்ஷயா கொலை செய்யப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து அக்ஷயாவின் உடலை மீட்டு பிரேத
பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலைவறைவான அமல்ராஜை தேடி வரும் போலீசார், மருத்துவ பரிசோதனையின் முடிவில்
தான் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாளா? என்பது
தெரியவரும் என்று கூறியுள்ளனர். 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு
புதைக்கப்பட்ட சம்பவம் சிவகங்கையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments