
சென்னை: தேமுதிகவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் விளக்கம்
தருவதற்காக அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அளித்த கெடு இன்றுடன்
முடிவடைகிறது. ஆனால் 7 பேரும் பதிலளிக்காததால் அனைவரும் தேமுதிகவில்
இருந்து நீக்கப்படுவார்களா? என்ற பரபரப்பு நிலவுகிறது.
தேமுதிகவில் இருந்து மாஃபா பாண்டியராஜன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன்,
சுந்தர்ராஜன், அருண் பாண்டியன், சுரேஷ்குமார், சாந்தி ஆகிய 7
எம்.எல்.ஏ.க்கள்
அதிருப்தியாளர்களாக செயல்பட்டு வந்தனர். ராஜ்யசபா
தேர்தலில் தேமுதிகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு வாக்களிக்காமல் அதிமுக
மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருக்கு அதிருப்தி
எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.
இதைத் தொடர்ந்து 7 எம்.எல்.ஏக்களுக்கும் விளக்கம் கேட்டு கடந்த மாதம்
28-ந் தேதி விஜயகாந்த் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸில் 7 பேரும்
சஸ்பென்ட் செய்யப்படுவதாகவும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்
தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அக்கடிதத்தில் விதிக்கப்பட்ட கெடு
இன்றுடன் முடிவடைகிறது. ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரும்
விஜயகாந்த் நோட்டீஸுக்கு பதில் அனுப்பவில்லை. "எங்கள் மீது என்ன நடவடிக்கை
வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்" என்பது 7 பேரின் கருத்தாக
இருக்கிறது.
இதனால் 7 எம்.எல்.ஏக்களையும் நீக்கி அதிரடி உத்தரவை விஜயகாந்த்
பிறப்பிப்பாரா என்ற பரபரப்பு நிலவுகிறது.
Comments