"2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கு: அனில் அம்பானி, டினா ஆஜராக உத்தரவு

புதுடில்லி: "2ஜி ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கில், அனில் திருபாய் அம்பானி குரூப் நிறுவனங்களின் தலைவர், அனில் அம்பானியும், அவரின் மனைவி டினா அம்பானியும், அரசு தரப்பு சாட்சியாக ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும்' என, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள,
சுவான் டெலிகாம் நிறுவனத்தில், அனில் அம்பானியின் நிறுவனம், 990 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக தெரிய வந்துள்ளது. அதனால், "அனில் அம்பானியும், அவரின் மனைவி டினா அம்பானியும் மற்றும், 11 பேரும், கோர்ட்டில் அரசு தரப்பு சாட்சியாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதைச் செய்யும்படி அனைவருக்கும், உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, சிறப்பு கோர்ட்டில், சி.பி.ஐ., மனுத்தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த, சிறப்பு கோர்ட் நீதிபதி, ஓ.பி.சைனி நேற்று பிறப்பித்த உத்தரவு: "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், அனில் அம்பானியும், அவரின் மனைவி டினா அம்பானியும், அரசு தரப்பு சாட்சியாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கில், ஒரு முடிவுக்கு வர, இருவரின் சாட்சியமும் அவசியம். அனில் திருபாய் அம்பானி குரூப் நிறுவனங்களிலும், ஷெல் கம்பெனிகளிலும், இருவரும் முக்கிய பொறுப்பு வகிப்பதால், அவர்களின் சாட்சியம் அவசியமாகும். அதை தேவையில்லை என, சொல்ல முடியாது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Comments