விஸ்வரூபம்-2 - சர்ச்சை குறைவு.. ரொமான்ஸ் ஜாஸ்தி: கமல்

சென்னை : தற்போது, விஸ்வரூபம்-2ம் பாக படத்தின் அதிகாரப் பூர்வமான போஸ்டர்களை வெளியிட்டுள்ள கமல், இப்படம் நிச்சயம் வெற்றியடையும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். முதலாவதாக திரையிடப்பட்ட விஸ்வரூபம் சந்தித்த பிரச்சினைகள் சொல்லி மாளாது. முழுவதும் தயாரான படம் திரையில் ரசிகர்களின் பார்வைக்கு வந்து சேர நிறையவே சோதனைகளை சந்திக்க வேண்டி இருந்தது. ஒரு வழியாக பிரச்சினைகளைத் தீர்த்து வெற்றிகரமாக, விஸ்வரூபத்தை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கினார் அப்படத்தின் இயக்குநரும், கதாநாயகனுமான கமல்.

விஸ்வரூபம்-2... தற்போது, முதலில் எடுக்கப்பட்ட விஸ்வரூபம் படத்தில் நீளம் கருதி வெட்டப்பட்ட காட்சிகளோடு மேலும் சில காட்சிகளைப் படமாக்கி விஸ்வரூபம்-2வை உருவாக்கி வருகிறார் கமல்.

விளம்பரங்களுக்காக படமெடுக்கவில்லை... விஸ்வரூபம்-2 குறித்து கமல் கூறியதாவது, ‘வீண் விளம்பரங்களுக்காக நான் படமெடுக்கவில்லை. ரசிகர்களுக்கு ஒரு கருத்தை சொல்லவே நான் முயல்கிறேன். பொதுவாக, முதல் பாகம் வெறி பெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகே, அடுத்த பாகம் குறித்து ஆலோசிப்பார்கள். ஆனால் நான் அப்படியல்ல.

திட்டமிட்ட ஒன்று தான்... முதல் பாக வேலைகளுக்கு முன்னதாகவே, இரண்டாம் பாகத்தின் வேலை குறித்தும் செயல் படத் தொடங்கி விட்டேன். விஸ்வரூபம் கதையே இரண்டு பாகங்களாக தயார் செய்யப்பட்ட ஒன்று தான்.
உஷாராயிட்டேன்... இப்படத்தின் முதல் பாகம் பலப் பிரச்சினைகளைச் சந்தித்ததால், நான் இப்போது உஷாராகவே இருக்கிறேன். எனவே, இரண்டாம் பாகத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்களை அதிகம் பேசாமல், ரொமாண்டிக்காக இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

அதி நவீன படைப்பு... டெக்னிக்கலாகவும் அதி நவீனமாகவும் படமாக்கி வருகிறோம். தண்ணீருக்கடியில் கூட நிறைய காட்சிகளைப் படமாக்கி இருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.

Comments