மதுபானி: உணவுப்பொருட்களில் பாஸ்பரஸ் வேதிப்பொருட்கள் கலப்படம் இருந்ததால்,
மாணவர்கள் பலியாகியுள்ளனர் என பீகார் அமைச்சர் கூறியுள்ளார். பீகாரில்
நேற்று சாப்ரா மாவட்டத்தில் மதிய உணவு சாப்பிட்ட 22மாணவர்கள் பலியான
சம்பவத்தின் சோகம் அடங்குவதற்குள் 24 மணி நேரத்திற்குள் மற்றொரு சோகம்
நடந்துள்ளது.
நேற்று பீகார் மாநிலம் சரண் மாவட்டம், தர்மாசதி கந்தாவான் கிராமத்தில் உள்ள, அரசு ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, நேற்று மதியம், அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சோயா பீன்ஸ் கலந்த, மதிய உணவு வழங்கப்பட்டது. இதைச் சாப்பிட்டதும், மாணவர்கள் அடுத்தடுத்து, வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதில் 22 பேர் பலியாகினர்.இதனால் பீகார் முழுவதும் வன்முறை வெடித்துள்ளது.
இறப்பிற்கு காரணம் என்ன ?
இது குறித்து பீகார் அமைச்சர் பி.கே.ஷாகி, கூறுகையில், பீகாரில் , மதிய உணவு சாப்பிட்டதில் 22 மாணவர்கள் பலியான சம்பவம் துயரமானது. பலியான மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2லட்சம் இழப்பீட்டை முதல்வர் நிதீஷ் அறிவித்துள்ளார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உணவுப்பொருட்கள் வாங்கிய எண்ணெய் வகையறாக்களில் பாஸ்பரிக் வேதிப்பொருள் இருந்ததால் விஷ உணவாகி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. உணவு பொருட்களை இந்த மார்க்கெட்டில் தான் வாங்கிட வேண்டும் என சம்பந்தபட்ட பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு சிலர் நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள் என தெரிகிறது. தலைமை ஆசிரியையின் கணவனர் அரசியல் செல்வாக்கு பின்னணியில் உள்ளவர் என்பதும் தெரிய வந்துள்ளது. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் விஷமிகள் இதனை செய்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
மற்றொரு சோகம்
இன்று பீகார் மதுபானி அடு்த்த மஸராக் கிராமப்பகுதியில் மதிய உணவு சாப்பிட்ட 15 மாணவர்கள் திடீரென வாந்தி எடு்த்து மயங்கி விழுந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சுகாதாரமற்ற உணவு சாப்பிட்டதால் இவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதா, அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
Comments