தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கட்சியை விட்டு நீக்கம்? 13ம் தேதி விஜயகாந்த் இறுதி முடிவு

ராஜ்யசபா தேர்தலில், கட்சி மாறி அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்த, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேருக்கும், விளக்கம் அளிப்பதற்கான கெடு, இன்றுடன் முடிவடைகிறது. ஏழு பேரையும் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதில், விஜயகாந்த் உறுதியாக உள்ளார். வரும், 13ம் தேதி, தனது முடிவை அறிவிக்க உள்ளார். ஆனால், அத்திட்டத்தை தள்ளிப் போடுமாறு, மாநில நிர்வாகிகள் சிலர், அவரை வலியுறுத்தி வருகின்றனர்.
 
அதிருப்தியாளர்கள்:

தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜன், தமிழழகன், மைக்கேல் ராயப்பன், நடிகர் அருண் பாண்டியன், சுரேஷ்குமார், சாந்தி, பாண்டியராஜன் ஆகியோர், ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்தனர். இதையடுத்து, கடந்த மாதம், 29ம் தேதி, ஏழு பேரும் தே.மு.தி.க.,வில் இருந்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். விளக்கம் கேட்டு, இவர்களுக்கு கட்சி தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதினார். இதற்கான பதிலை, ஏழு பேரும், 10ம் தேதிக்குள் அளிக்கவேண்டும். இது குறித்து, ஏழு பேரும் ஆலோசனை நடத்தினர். விளக்க கடிதம் அனுப்ப, அ.தி.மு.க., தலைமையின் அனுமதியை பெற முயற்சித்தனர். ஆனால், "கடிதம் அனுப்ப வேண்டாம்' என, உத்தரவு கிடைத்ததாகவும், ஏழு பேரும் விளக்க கடிதம் அனுப்பும் திட்டத்தை கைவிட்டதாகவும், தகவல் வெளியாகிஉள்ளது. விஜயகாந்த், விதித்த கெடு இன்று (10ம் தேதி) முடிகிறது. இந்த சூழ்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், ஏழு பேரையும், கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கும் முடிவை விஜயகாந்த் எடுத்துள்ளதாக தெரிகிறது.

தீவிர ஆலோசனை:

நேற்று காலை, 11:30 மணிக்கு, தே.மு.தி.க., தலைமை அலுவலகம் வந்த அவர், இது குறித்து பகல், 1:00 மணி வரை தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால், ஏழு பேரையும் கட்சியில் இருந்து நீக்கினால், எதிர்க்கட்சி அந்தஸ்து பறிக்கப்படும் என்பதால், அத்திட்டத்தை தள்ளிப் போடுமாறு, மாநில நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சிலரும் விஜயகாந்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, தே.மு.தி.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவரின் அறை, கார், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட எதையும், விஜயகாந்த் பயன்படுத்துவதில்லை. விசுவாசிகளாக இருப்பர் என, நம்பிய ஏழு பேரும், துரோகம் செய்து விட்டதை, விஜயகாந்தால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் தயவில் எதிர்க்கட்சி தலைவராக நீடிப்பதையும் அவர் விரும்பவில்லை. அதனால், ஏழு பேரையும் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. ஏழு பேரையும் கட்சியை விட்டு நீக்காவிட்டால், மேலும், சில எம்.எல்.ஏ.,க் களை இழுத்து, "போட்டி தே.மு.தி.க.,'வை ஏற்படுத்த, அ.தி.மு.க., முயற்சிக்கும். அதன் பிறகு தானாகவே எதிர்க்கட்சி தலைவர் பதவி போய்விடும்.

கட்சிக்கு மதிப்பு:

அதற்கு முன்பாகவே, அந்த நடவடிக்கையை நாமே எடுத்து விட்டால், மக்கள் மற்றும் நடுநிலையாளர்களிடம், கட்சிக்கு மதிப்பு கூடும் என, விஜயகாந்த் நினைக்கிறார். அதனால் தான், ஏழு பேரையும், கட்சியை விட்டு நீக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறார். ஆனால், கட்சியில் உள்ள சிலருக்கு இது பிடிக்கவில்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதால், அடுத்தாண்டு நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தல், லோக்சபா தேர்தலுக்கு பிறகு, இந்த நடவடிக்கையை எடுக்கலாம் என, அவர்கள் கூறுகின்றனர். இவ்விஷயத்தில், வரும், 13ம் தேதி, விஜயகாந்த் தனது முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Comments