சோலார் பேனல் அமைத்து தருவதாகக் கூறி கோடிக் கணக்கில் பண மோசடி செய்த
விவகாரத்தில் முதல்வர் உம்மன்சாண்டியின் அலுவலக உதவியாளர்கள் ஈடுபட்டனர்
என்பது புகார். இதில் பலரும் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில்
உம்மன்சாண்டி பதவி விலக வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.
இதனால் நேற்று சட்டசபை முடங்கியது. திருவனந்தபுரம் பெரும் போராட்டத்தை
எதிர்கொண்டது. இந்நிலையில் உம்மன்சாண்டி பதவி விலக வலியுறுத்தி இன்று 12
மணிநேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு
விடுத்துள்ளன. இதனால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கொல்லம்,
திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கொல்லத்தில் உம்மன்சாண்டியின் உருவபொம்மையை எரித்து எதிர்க்கட்சியினர்
போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளும் செங்கோட்டை,
புளியரையிலும்,ஆரியன்காவு,புனலூர் பகுதிகளிலும் எல்லையிலேயே
நிறுத்தப்பட்டுள்ளன. தேனி, கோவை மாவட்டங்களில் இருந்தும் கேரளாவுக்கு
பேருந்துகள் இயக்கப்படவில்லை. கோவை மாவட்டத்தில் இருந்து செல்லும் லாரிகள்
வாழையாறு சோதனைச் சாவடியிலேயே நிறுத்தப்படுகின்றன. கன்னியாகுமரியில்
இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிற பூக்கள், காய்கறிகள் ஆகியவையும்
இன்று எடுத்துச் செல்லப்படவில்லை.
Comments