ஒரு ஆண்டுக்கு ரூ1.25 லட்சம் கோடியில் உணவுப் பாதுகாப்பு திட்டம்.! நாடு தாங்குமா?

டெல்லி: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மிகப் பிரம்மாண்ட கனவுத் திட்டமான வர்ணிக்கப்படுகிற உணவுப் பாதுகாப்பு திட்டத்தால் நாட்டின் பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு திட்டம். காங்கிரஸ் தரப்பில் சோனியாவின் கனவுத் திட்டம் என்கிறார்கள்.. ரூ1.25 லட்சம் கோடி செலவிலான இத்திட்டம்தான் உலகிலேயே மிகப் பெரிய உணவு மானிய திட்டம் என்றும் புகழ்கின்றனர். நாட்டின் பொருளாதாரம் ஏற்கெனவே சரிவில் இருக்கும் நிலையில் இந்த உணவு பாதுகாப்பு திட்டத்தை நிறைவேற்றிவிட முடியுமா? என்ற ஐயமும் எழுப்பப்படுகிறது.

உணவு பாதுகாப்பு திட்டம் -அம்சங்கள் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு திட்டத்துக்கு ஒரு ஆண்டுக்கு ரூ1.25 லட்சம் கோடி செலவாகுமாம். கிராமப்புறங்களில் 75% பேரும் நகர்ப்புறங்களில் வசிப்போர் 50% இத்திட்டத்தால் பயனடைவராம்.

என்ன கிடைக்கும்? இத்திட்டத்தின் மூலம் 6 மாத குழந்தை முதல் அனைவரும் பயனடையலாம். ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு கிலோ ரூ.3 விலையில் 5 கிலோ அரிசி அல்லது கிலோ ரூ.2 விலையில் 5 கிலோ கோதுமை வழங்கப்படும். கர்ப்பிணிகள் மற்றும் பிரசவ காலபெண்களுக்குரூ.6 ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருள் அல்லது ரூ.6 ஆயிரம் ரொக்கம் கொடுக்கப்படும் என்பது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

நாடு தாங்குமா? இந்தியாவின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி வெகுவாக குறைந்து வரும் நிலையில் ஒரு ஆண்டுக்கு ரூ1.25 லட்சம் கோடி இந்த ஒரு திட்டத்துக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கிறபோது பட்ஜெட்டில் மிகப் பெரும் பற்றாக்குறை ஏற்படும். பொருளாதார வளர்ச்சி விகித சர்வை கட்டுப்படுத்துவோம் என்ற பிரதமர் மன்மோகன்சிங்கின் கருத்துக்கு எதிரானதாக இது அமையலாம். ஏற்கெனவே இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்து வருவதால் பொருளாதார சிக்கல் உச்சமடையும் நிலை வரும்..அதாவது வளரும் நாடுகளிலேயே அதிகளவு பட்ஜெட் பற்றாக்குறை உள்ள நாடு என்ற நிலை இந்தியாவுக்கு வரும் என்று எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள்.
 
பின்னர் ஏன் இந்த திட்டம்? 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இத்திட்டத்தை அவசர சட்டத்தின் மூலம் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்று கூறப்படுகிறது. இந்தியா, பிரேசில், ரஷியா, சீனா ஆகிய பிரிக் நாடுகளிலேயே வருமானத்துக்கு அதிகமாக செலவிடும் அரசாக இந்திய அரசுதான் இருக்கிறது. இருப்பினும் தேர்தல் லாபத்துக்காகவே இவ்வளவு பெரிய திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு துடிக்கிறது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

Comments