கிரானைட் முறைகேடு; அரசிற்கு 1200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக மீண்டும் 2 வழக்குகள்

மேலூர்: மதுரை மேலூர் பகுதியில் முறைகேட்டில் ஈடுபட்ட பி.ஆர்.பி., மற்றும் சிந்து கிரானைட் குவாரிகள் மீது, நேற்று பதிவான இரு புகார்களில் மட்டும், அரசிற்கு 1203.10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலூர், கீழவளவு,
இ.மலம்பட்டி, திருவாதவூர் பகுதியில் செயல்பட்ட கிரானைட் குவாரிகள், அரசிற்கு சொந்தமான இடங்களில் அத்துமீறி செயல்பட்டு, கிரானைட் கற்களை வெட்டி எடுத்து,
பல்லாயிரம் கோடி ரூபாய் அரசிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக பல வழக்குகள் ஏற்கனவே பதிவானது. அளவீடுகளில் வித்தியாசம் இருப்பதாக குவாரி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட, மீண்டும் குவாரிகளை அளவீடு செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. தற்போது அளவீடு செய்யப்பட்ட அடிப்படையில், மீண்டும் முறைகேடு கிரானைட் குவாரிகள் மீது, புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. நேற்று திருவாதவூர் வி.ஏ.ஓ., அனுராதா, பி.ஆர்.பி., மற்றும் சிந்து கிரானைட் நிறுவனங்கள் மீது புகார் கொடுத்தார். திருவாதவூரில் சர்வே 525/7ல் கிரானைட் கற்களை அத்துமீறி, வெடி வைத்து தகர்த்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பின்றி செயல்பட்டதாக சிந்து கிரானைட் மீது வழக்கு பதிவானது. 13,24,27.03 கன மீட்டர் அளவிற்கு கற்களை எடுத்து, அரசிற்கு 302.82 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, சிந்து கிரானைட் உரிமையாளர் செல்வராஜ், அவரது மனைவி சாந்தி, மகன் சூரியபிரகாஷ், ஹரி, திருநாவுக்கரசு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மற்றொரு புகார் பி.ஆர்.பி., நிறுவனம் மீது தரப்பட்டது. திருவாதவூர் கீழசுனை குளம் புறம்போக்கு இடத்தின் ஒரு பகுதியான சர்வே 225/5ல் 1.19.0 எக்டேர் இடம், சர்வே 225/7 பாறை புறம்போக்கில் 1.47.5 எக்டேர் இடங்களில் அத்துமீறி கற்களை வெட்டியதாக புகார் தரப்பட்டது. இதன் மூலம் அரசிற்கு 900.28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மனைவி செல்வி, மகன்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், மகள் சிவரஞ்சனி, மருமகன் மகாராஜன், மருமகள் சந்திரலேகா, உறவினர்கள் தெய்வேந்திரன், காந்தி, தவசெல்வம் உட்பட பி.ஆர்.பி., கிரானைட் நிர்வாகிகள் மீது புகார் அளிக்கப்பட்டது.

நில அபகரிப்பு புகார்:

பி.ஆர்.பி., நிறுவனத்தின் மீது வீரபாண்டி என்பவர் நில அபகரிப்பு புகார் ஒன்றையும் கொடுத்தார். தனது தந்தையை ஏமாற்றி, மேலூரில் உள்ள நிலத்தை சென்ட் ஒன்று ரூ. 60 ஆயிரம் விலை பேசி, பி.ஆர்.பி., நிர்வாகம் 2003ல் வாங்கியது. இதற்காக ரூ. ஒரு லட்சம் மட்டுமே கொடுத்து விட்டு, மீதி பணத்தை தராமல் மிரட்டுவதாக புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் பி.ஆர். பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார், பவர் ஏஜண்ட் லோகநாதன், முருகேசன், சொக்கம்பட்டியை சேர்ந்த சுந்தரம், செந்தில், நில புரோக்கர் சேக் மீது மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Comments