"மிஸ்டர் 11 லட்சம் என்றால்... அது, கருணாநிதி!': சொல்கிறார் ஸ்டாலின்

கோவை: கோவையில் நேற்று நடந்த, 116 ஜோடிகளுக்கான இலவச திருமண விழாவில், தேர்தல் நிதியாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினிடம், ரூ. 1.5 கோடி வழங்கப்பட்டது.

கோவை மாநகர தி.மு.க., சார்பில், இலவச திருமண விழா, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் - மனைவி துர்கா தலைமையில், குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் நடந்தது. தேர்தல் நிதியாக, ஸ்டாலினிடம் ரூ.1.5 கோடிக்கான காசோலையை, மாநகர செயலாளர் வீரகோபால் வழங்கினார்.


மணமக்களை வாழ்த்தி ஸ்டாலின் பேசியதாவது:

தேர்தல் நிதி வழங்குவதில், பல ஆண்டுகளாக கோவை, முன்னோடியாக திகழ்கிறது. மாநகர் சார்பில் ரூ. 1.5கோடி வழங்கிய நிலையில், மாவட்டம் சார்பில், இதைவிட இரண்டு மடங்கு நிதி அளிக்கப்படும், என்ற நம்பிக்கை உள்ளது. "மாநகரமா, மாவட்டமா' என்ற போட்டிக்கிணங்க, மாநகரம் சார்பில் இரண்டாம் கட்ட நிதி அளிக்கப்படும் போது, அதுமாவட்டம் அளித்த முதல் கட்ட நிதியை விட கூடுதலாக இருக்கும், என்றும் நம்புகிறேன். கடந்த 1962, தேர்தலில்போது, கட்சித் தலைவர் அண்ணாதுரை, பொருளாளர் கருணாநிதியிடம் தேர்தலை சந்திக்க 10 லட்சம் ரூபாய் நிதி வசூலித்துதர வேண்டும் என, தெரிவித்திருந்தார். ஆனால், கருணாநிதியோ, கூடுதலாக ஒரு லட்சம் வசூலித்து 11 லட்ச ரூபாயாக வழங்கினார். அந்நேரத்தில், கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அண்ணாதுரை வாசித்து கொண்டிருக்க, சைதாப்பேட்டை தொகுதிக்கான முறை வந்தபோது, இந்த தொகுதி வேட்பாளர், "மிஸ்டர் 11 லட்சம்' என்று அறிவித்தார். பின்னர், கட்சி நிர்வாகிகளின் குழப்பத்தை தீர்க்கும் வகையில், அடுத்த சில நிமிடங்களில், "கருணாநிதி' என்று, வேட்பாளரின் பெயரை அறிவித்தார். அவ்வளவு தூரம் கட்சியும், நிதியும் இரண்டற கலந்திருப்பவர் தலைவர். அவர் பிள்ளையான நான், அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் இருக்க வேண்டாமா, அதை நிரூபித்து காட்டவே நிதி வசூலில் அதிக அக்கறை கொண்டுள்ளேன். இவ்வாறு, ஸ்டாலின் பேசினார். திருமண விழாவில், நிதிவசூல் குறித்தே ஸ்டாலின் அதிகம் பேசியதால், மணமக்களை வாழ்த்தி எப்போது பேசுவார் என, திருமண ஜோடிகளின் உறவினர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.

ஆடியில் திருமணமா:

திருமணத்துக்கு ஆகாத மாதங்கள் ஆடி, புரட்டாசி, மார்கழி. ஆடி மாதம், அம்மன் மற்றும் முன்னோர் வழிபாட்டுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த மாதத்தில், தேவர்கள் உறங்கி விடுவதாக ஐதீகம். அப்போது நம்மை பாதுகாக்க முன்னோர் வருகின்றனர். இந்த சமயத்தில், அவர்களுக்குரிய வழிபாட்டை செய்ய வேண்டும் என்பதால், திருமணம் நடத்துவதில்லை. இரவில் குழந்தை அழும்போது, குடும்பத்தில் மற்றவர்கள் உறங்கி விட்டாலும், தாய் எழுந்து பாலூட்டுகிறாள். அதுபோல், மற்ற தெய்வங்களின் தூக்க காலமாக இது கருதப்பட்டாலும், அம்பாள் உறங்காமல் இருந்து தன் பிள்ளைகளான பக்தர்களை காக்கிறாள். அதனால் ஆடிவெள்ளி, ஆடி செவ்வாய் நாட்களில், அம்பாளுக்கு சிறப்பான பூஜை செய்ய வேண்டும். தெய்வவழிபாட்டுக்குரிய காலங்களில் சுபநிகழ்ச்சிகளை நடத்தகூடாது என்ற ஐதீகம் இருக்கிறது. மேலும், ஆடியில் திருமணம் முடித்தால் சித்திரையில் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு. அப்போது வெயில் காலம் என்பதால், குழந்தை பெற்ற பெண்கள் சிரமப்படுவார்கள் என்பதாலும், ஆடியில் திருமணம் செய்வதில்லை. இதனாலயே, தி.மு.க.,வின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்களின் குடும்பங்களில் ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில், திருமண நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் முடித்த 116 ஜோடிகளில் 4 ஜோடிகள் பழசு!

ஸ்டாலின் தம்பதியர் நேற்று திருமணம் செய்து வைத்த 116 ஜோடிகளில், 4 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு, அன்னை அறக்கட்டளை என்ற அமைப்பின் சார்பில், கடந்த மாதம் 28ம் தேதியன்று ஈச்சனாரி விநாயகர் கோவிலில் திருமணம் நடந்துள்ளது. ஜோடிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக, ஏற்கனவே திருமணமான இவர்களை கட்சிக்காரர்கள் அழைத்துச் சென்றிருப்பதாகத் தெரிகிறது. சில பொருட்களுக்காக ஒரு மாதத்துக்குள் இரண்டாவது முறையாக தாலி கட்டும் நிர்ப்பந்தத்தை அந்த ஜோடியினரும் எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பது தெரியவில்லை. இந்த திருமணத்துக்கு ஏற்பாடு செய்த மாநகர தி.மு.க., செயலாளர்வீரகோபாலிடம் இதுபற்றி கேட்டபோது, ""எனக்குத் தெரிய, அப்படி யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக, கட்சிக்காரரர்கள் யாராவது சிபாரிசு செய்திருக்கலாம். அவர்களின் ஒப்புதல் இல்லாமல், இந்த திருமணத்தில் அவர்களது பெயர்கள் சேர்க்கப்பட வாய்ப்பில்லை. அவர்களை யார் அழைத்து வந்தார்கள் என்ற விபரத்தை விசாரித்துச் சொல்கிறேன்,'' என்றார். நேற்று திருமணம் நடந்த 116 ஜோடிகளில், நமக்குத் தெரியவே 4 ஜோடிகளுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருப்பது உறுதியாகியுள்ளது; மேலும் எத்தனை ஜோடிகள், இதேபோல "பழைய ஜோடிகள்' இருந்தார்கள் என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை.

Comments