மூளை இல்லாத அதிசய குழந்தை மூன்று வருடத்திற்குப் பின் திடீர் மரணம்

 Nickolas Survived 3 Years After Born With Brain Stem கொலரடோ: அமெரிக்காவின் கொலரோடா நகரில் வசித்த ஒரு தம்பதியருக்குப் பிறந்த மூளை இல்லாத அதிசய சிறுவன் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் சனிக்கிழமை உயிரிழந்தான்.
யாராவது ஏதாவது தவறு செய்தால் உனக்கு மூளை இருக்கா இல்லையா என்று கேட்பது வழக்கம். ஆனால் அதிசயமாக மூளை இல்லாத குழந்தை ஒன்று பிறந்து அது மூன்றாண்டுகள் வரை உயிர் வாழ்ந்துள்ளது.

கொலரடோவைச் சேர்ந்த ஷீனாவிற்கு கடந்த 2008 ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. தலைப் பகுதியில் மூளை என்ற பாகமே இல்லாமல் இருந்தது. பிறந்து சில மணிநேரங்கள் மட்டுமே உயிரோடு இருக்கும் என்று மருத்துவர்கள் கூறினாலும் அந்த கூற்றினை உடைத்துவிட்டு உலகில் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது அந்த அதிசய குழந்தை. அவனுக்கு நிகோலஸ் கோக் என்று பெயர்சூட்டி மகிழ்ந்தனர் அவனது பெற்றோர்.
அவனுக்கு எவ்வித மருத்துவ உபகரணங்களும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் அவனது சீரான உடல் இயக்கங்களுக்காக உணவை விட அதிகமாக ஏராளமான மாத்திரைகள் அவனுக்கு கொடுக்கப்பட்டன.
மூன்று ஆண்டுகள் வரை உயிர்வாழ்ந்த சிறுவன் நிக்கோலஸ் பற்றி அனைவரும் வியந்து பாராட்டினர். ஃபேஸ்புக்கில் கூட அவனது போட்டோக்கள் வெளியிடப்பட்டது. அந்த அதிசய சிறுவன் நிக்கோலஸ் சனிக்கிழமையன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தான். உலகில் பிறக்கும் பத்தாயிரம் குழந்தைகளில் ஒருவர் மூளை இல்லாமல் பிறக்கின்றனர் என்று மருத்துவ உலகம் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய குறைபாடுள்ள குழந்தைகள் சில நிமிடங்களோ, சில மணிநேரமோதான் உயிர்வாழ்வார்கள். அதையும் தாண்டி மூன்று ஆண்கள் வரை உயிர்வாழ்ந்துள்ளான் நிக்.
மூளையே இல்லாமல் பிறந்தாலும் அவனுடன் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமானது. அன்பு என்றால் என்னவென்பதையும், வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் நிக்கோலஸ் கற்றுக் கொடுத்தான் என்று அவனது பாட்டி குறிப்பிட்டுள்ளார்.

Comments