காசு கொடு, செங்கோலைத் தருகிறேன்... மதுரை ஆதீனம், நித்தியானந்தா இடையே சண்டை!

 New Clash Between Madurai Aadheenam Nithyanantha மதுரை: செங்கோல், தங்க கிரீடம் யாருக்கு என்பதில் மதுரை ஆதீனத்திற்கும், நித்தியானந்தாவுக்கும் இடையே கடும் சண்டை மூண்டுள்ளதாம்.
சட்ட மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக நித்தியானந்தாவை இளைய மடாதிபதி என்ற அந்தஸ்திலிருந்து தூக்கி விட்டார் ஆதீனம். இதையடுத்து நித்தியானந்தா தனது ஆட்களை அனுப்பி 3 லாரிகள் நிறைய தனது பொருட்களை ஆதீன மடத்திலிருந்து அள்ளிக் கொண்டு போய் விட்டார். மறக்காமல் நித்தியானந்தா படுத்து உறங்கிய டபுள் காட் கட்டில், மெத்தைகளையும் தூக்கிக் கொண்டு போய் விட்டனர்.

இந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு பஞ்சாயத்து வந்துள்ளதாம். அதாவது நித்தியானந்தாவின் தங்க கிரீடம், செங்கோல் ஆகியவை மடத்தில் உள்ளதாகவும், அதை தங்களிடம் திருப்பித் தர வேண்டும் என்றும் நித்தியானந்தாவின் ஆட்கள் சிலர் ரிஷி என்பவரது தலைமையில் வந்து ஆதீன மடத்தில் கூறியுள்ளனர். இதைக் கேட்டுக் கோபமடைந்த ஆதீனம் அருணகிரிநாதர், எனக்கு கனகாபிஷேகம் செய்தபோது 162 தங்கக் காசுகளைக் கொட்டி அபிஷேகம் செய்தனர். அதை நித்தியானந்தா அபகரித்துக் கொண்டு போய் விட்டார். அதேபோல பென்ஸ் காரையும் தூக்கிக் கொண்டு போய் விட்டார். மேலும் பல ஆவணங்களையும் வைத்திருக்கிறார். அதையெல்லாம் கொண்டு வந்து தந்தால்தான் கிரீடமும், செங்கோலும் கிடைக்கும் என்று கூறி விட்டாராம்.
ஆனால் அதை ஏற்க நித்தியானந்தா ஆட்கள் மறுத்து விட்டனராம். இதையடுத்து அவர்கள் விளக்குத்தூண் காவல் நிலையம் சென்று புகார் ஒன்று கொடுத்துள்ளார்களாம்.

Comments