சோனியா செலவுக் கணக்கை கேட்கும் மோடி முதலில் தன் கணக்கைச் சொல்லட்டும் -ஆர்டிஐ சேவகர் விளாசல்

 Gujarat Govt Has Not Given Info On Modis Travel
அகமதாபாத்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியினம மருத்துவச் செலவுகள் குறித்து மத்திய அரசிடம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விளக்கம் கேட்டு வரும் நிலையில், நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சர்களின் பயணச் செலவுகள் குறித்து ஒரு பெண் தகவல் பெறும் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டுள்ளார்.
ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக இதற்கான விளக்கத்தை நரேந்திர மோடி அரசு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள், மருத்துவச் செலவுகள், தங்கும் செலவுகளுக்காக ரூ. 1880 கோடி செலவிடப்பட்டுள்ளதாக நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். இதை காங்கிரஸ் மறுத்து வருவதோடு, அதற்கான ஆதாரத்தையும் கோரியது.
ஆனால், பத்திரிக்கைகளில் வந்த செய்தி தான் இது என்று மோடி கூறுகிறார். எந்தப் பத்திரிக்கை அது என்ற காங்கிரசின் கேள்விக்கு பாஜகவிடம் பதில் இல்லை. இதையடுத்து நரேந்திர மோடி மீது வழக்குத் தொடரப் போவதாக காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
இந் நிலையில் மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் 2007ம் ஆண்டு பங்கேற்க பெண்கள் முன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகள், அதற்கு ஆன செலவு விவரத்தைக் கோரி திருப்தி ஷா என்ற பெண் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் குஜராத் அரசிடம் விளக்கம் கோரியுள்ளார்.
ஆனால், 5 ஆண்டுகள் ஆன பின்னரும் அதன் விவரத்தை மோடி அரசு இன்னும் தராமல் இழுத்தடித்து வருகிறது. இது தொடர்பாக அவர் மீண்டும் மீண்டும் கடிதங்கள் அனுப்பியும் இதுவரை பதில் இல்லை.
இது தொடர்பாக குஜராத் பொதுத்துறை திருப்தி ஷாவுக்கு எழுதிய கடிதத்தில், மோடி 27 இடங்களில் மாநாடுகளில் பங்கேற்றதாக மட்டும் கூறியுள்ளது. ஆனால், செலவு விவரத்தைத் தரவில்லை.
முதல்வரின் அலுவலகம் செலவு விவரத்தைத் தராததால், செலவை பூஜ்யம் என்று கணக்கிட்டுக் கொள்ளுமாறும் திருப்தி ஷாவுக்கு பொதுத்துறை கடிதம் எழுதியுள்ளது.
ஆனால், இதை ஏற்க முடியாது என்று கூறும் திருப்தி ஷா, இந்த 27 இடங்களுக்கும் மோடி ஹெலிகாப்டரில் பறந்தார். இதனால் ஏராளமாக செலவாகியுள்ளது. எனவே விவரத்தை தந்தே ஆக வேண்டும் என்கிறார்.
இது தொடர்பாக குஜராத் தலைமை தகவல் கமிஷ்னருக்கு ஷா புகார் தரவே, இது குறித்து அவரும் விசாரித்து விளக்கம் தருமாறு அரசுக்கு உத்தரவிட்டார். ஆனாலும் இதுவரை மோடியின் அலுவலகம் விளக்கம் தரவில்லை என்று ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

Comments