சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இந்த
காய்ச்சலால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளை மறைப்பதில்தான் ஜெயலலிதா அரசு
குறியாக உள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி.
அவரிடம்
திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீதான குண்டர் தடுப்புச்
சட்டம் ரத்தான தீர்ப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
"திமுகவினர் மீதான தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இது
என்பது
தெளிவாகிறது," என்று சூசகமாகக் கூறினார்.
மேலும், தமிழகத்தில் டெங்கு
பாதிப்பு தீவிரமாக உள்ளது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு, "தமிழக அரசு
டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளை மறைப்பதிலேயே ஆர்வம்
காட்டுகிறது. அமைச்சர்களும் அந்தப் பல்லவியையே பாடுகிறார்கள். டெங்கு
காய்ச்சலால் யாரும் சாகவில்லை என்று நேற்று வரையிலே சொல்லிக்
கொண்டிருந்தார்கள். இப்போது காய்ச்சல் தீவிரமாக பரவி, பல உயிர்களை
மாய்த்திருக்கின்ற காரணத்தால் மத்திய சர்க்காருடைய மக்கள் நல்வாழ்வுத்துறை
அமைச்சர் அவர்களே, தமிழகத்திற்கு வந்து அதில் அக்கறைக் காட்டிச்
சென்றுள்ளார்," என்றார்.
மின்வெட்டு குறித்து...
"தமிழகத்தில்
மின்வெட்டு அடுத்த ஜூன் மாதம் வரை நீடிக்கும் என்று அமைச்சர்
சொல்லியிருக்கிறார். மின்வெட்டு காரணமாக நாள்தோறும் கொலை, கொள்ளை
அதிகரித்து வருகிறதே?" என்று செய்தியாளர் கேட்டதற்கு, "தி.மு.க.
ஆட்சியின்போது மின்வெட்டினைப் பற்றி ஒன்றிரண்டு செய்திகள் வரும்போதெல்லாம்,
தோள்தட்டிக் கோபமாகப் பேசிய அந்த அமைச்சர்; அப்போது தி.மு.க. ஆட்சியை
பலமாக கண்டித்த அந்த அமைச்சர்; இப்போது மின்சார குறைபாட்டுக்கு திரை
போட்டுக் கொண்டிருக்கிறார்," என்று பதிலளித்தார் கருணாநிதி.
Comments