நிருபரை நாயே என்று திட்டி மிரட்டிய விஜயகாந்த் மீது கொலை மிரட்டல் வழக்கு

 Chennai Airport Police Slaps Case Against Vijayakanth சென்னை: ஜெயா டிவி செய்தியாளரை நாய் என்று கூறித் திட்டி மிரட்டிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது சென்னை விமான நிலைய போலீஸார் கொலை மிரட்டல், அவதூறாகப் பேசுதல், காயம் ஏற்படுத்துதல், வழிமறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்தார் விஜயகாந்த். அப்போது ஜெயா டிவி செய்தியாளர் பாலு, அவரை அணுகி தேமுதிக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து வரும் விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்குக் கோப்பட்ட விஜயகாந்த், அந்த நிருபரை
கடுமையாக சாடினார். போய்யா, நாயே, நீயா சம்பளம் கொடுக்கிறே எனக்கு, போய் ஜெயலலிதாவைக் கேளுய்யா என்று கடுமையாக சாடினார். மேலும் தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசன் என்பவர் பாலுவைப் பிடித்துக் கீழே தள்ளி விட்டார்.
இதனால் அத்தனை செய்தியாளர்களிடம் அதிர்ச்சி அடைந்தனர். விஜயகாந்த் மற்றும் அவரது தரப்பினரின் இந்த அநாகரீக செயலுக்கு பல்வேறு பத்திரிக்கையாளர்கள் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், விஜயகாந்த் மீது பாலு விமான நிலைய போலீஸில் புகார் கொடுத்தார். அத்தோடு பத்திரிக்கையாளர்கள் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடமும் ஒரு புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் சட்ட ஆலோசனையை நடத்தி, நேற்று மாலை விஜயகாந்த் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
விஜயகாந்த் மீது கொலை மிரட்டல் விடுத்தல், அவதூறாகப் பேசுதல், காயம் ஏற்படுத்துதல், வழிமறித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் மகிமை வீரன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் விஜயகாந்த் கைது செய்யப்படுவாரா என்பது குறித்து போலீஸார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

Comments