காவிரி நீரை நிறுத்திய கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு

 Tn Govt Keeps Mum On Karnataka Decision To Stop Cauvery சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தன் இஷ்டத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறப்பதை நிறுத்தி விட்ட கர்நாடக அரசின் நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்திருக்கிறது. கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் தமிழக அரசு தீர்மானித்துள்ளது.
காவிரி நீர் ஆணையம்
தமிழகத்தின் பாசனத் தேவைக்காக
காவிரி நடுவர் மன்ற உத்தரவை கர்நாடகம் அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு பலமுறை கோரியும் அதை கர்நாடகம் கண்டு கொள்ளவில்லை, மத்திய அரசும் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பிரதமர் அலுவலகத்தை கடுமையாக சாடியது. இதையடுத்து கூட்டப்பட்ட காவிரி நீர் ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு அக்டோபர் 15ம் தேதி வரை விநாடிக்கு 9000 கன அடி நீர் வீதம் திறந்து விடுமாறு உத்தரவிட்டார் பிரதமர்.
சாடிய உச்சநீதிமன்றம்
ஆனால் இதை ஏற்கவில்லை கர்நாடகம். இதையடுத்து மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு. அங்கு கர்நாடக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த உச்சநீதிமன்றம், பிரதமரின் உத்தரவை செயல்படுத்துமாறு உத்தரவிட்டது. இதையடுத்து காவிரி நீரை திறந்து விட்டது கர்நாடக அரசு. இருப்பினும் மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் அது தாக்கல் செய்தது. அதை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், பிரதமரின் முடிவை ரத்து செய்ய முடியாது என்று கூறி விட்டது.
கர்நாடக லாபி
மறுபக்கம் தனது மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா மூ்லம் பிரதமருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பலமான நெருக்குதலைத் தொடுத்தது கர்நாடக அரசு. இந்த விஷயத்தில் பாஜகவினரும் ஒன்று சேர்ந்து கொண்டனர். தமிழகத்தின் மீது பாசமாக இருப்பதாக கூறிக் கொள்ளும் வெங்கையா நாயுடு தலைமையில் பாஜக எம்.பிக்கள் பிரதமரை சந்தித்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நீர் நிறுத்தம்
ஆனால் தமிழகத்தில் தனக்கு மேலும் பெயர் கெட்டு நாறிப் போய் விடும் என்பதால் பிரதமர், இப்போதைக்கு முடிவை வாபஸ் பெற முடியாது. வேண்டுமானால் அடுத்த ஆணையக் கூட்டத்தில் இதுகுறித்து பரிசீலிக்கலாம் என்று கூறி விட்டார். இதனால் கோபமடைந்த கர்நாடக அரசு நேற்று இரவோடு இரவாக தண்ணீர் திறப்பை நிறுத்தி விட்டது.
தமிழக அரசு முடிவு
கர்நாடக அரசின் தன்னிச்சையான இந்தப் போக்கையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எவ்வளவு காவிரி நீர் வந்து கொண்டிருந்தது? எவ்வளவு கன அடி நீர் குறைந்து இருக்கிறது? என்பது போன்ற விவரங்கள் முன்வைக்கப்பட்டன.
கூட்டத்தின் முடிவில் கூட்டாட்சி தத்துவத்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் கர்நாடக செயல்படுவதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிப்பதாகவும் தமிழகத்துக்கு நீதி கிடைக்கும் வகையில் கர்நாடகா அரசு மீது உடனே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கினை பெற்றே தீர வேண்டும் என்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் உறுதியான நடவடிக்கை மற்றும் விடாமுயற்சி காரணமாக, காவிரி நதி நீர் ஆணைய உத்தரவின்படி 20.9.2012 முதல் 15.10.2012 வரை நாளென்றுக்கு 9,000 கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டும் என்று கர்நாடகத்திற்கு உச்ச நீதிமன்றம் 28.9.2012 அன்று உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து, 29.9.2012 முதல் தண்ணீரை விடுவிக்கத் துவங்கிய கர்நாடகம், நேற்று (8.10.2012) இரவு முதல் தமிழகத்திற்குரிய தண்ணீரை விடுவிப்பதை தன்னிச்சையாக நிறுத்திவிட்டது.
இந்தச் சூழ்நிலையில், காவிரி நதி நீர்ப் பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப் பணித் துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிக்கும் வகையிலும், தமிழகத்திற்கு விடுவித்துக் கொண்டிருந்த தண்ணீரை தன்னிச்சையாக நிறுத்தி, தமிழகத்திற்கு உரிய பங்கினை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து, தமிழகத்திற்கு உரிய பங்கினை உடனடியாக பெற தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவினையடுத்து, கர்நாடக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உடன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Comments