ஜெயலலிதா பிரதமராக அனைத்து தகுதிகளும் கொண்டவர்- சொல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்

 Jayalalitha Is Eligible Become Pm ஈரோடு: தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய பிரதமராக அனைத்து தகுதிகளும் கொண்டவர் என்று அமைச்சர் ஓ.பன்னீ்ர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக கட்சி சார்பில் மக்கள் பணி மற்றும் கட்சி பணிகளில் ஈடுபடுவது குறித்து பாராளுமன்ற தொகுதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம் நேற்று ஈரோடு மஹாலில் நடைபெற்றது. அதிமுக மாவட்ட அவை தலைவர் பி.சி.ராமசாமி தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழக முதல்வர் ஜெயலலிதா, நாட்டின் பிரதமராக அனைத்து தகுதிகளும் கொண்டவர் என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
தமிழகத்தில் 3வது முறையாக முதல்வராக பதவி ஏற்றுள்ள ஜெயலலிதா, அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு, உடை, உறைவிடம் ஆகியவை இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆட்சி செய்து வருகிறார்.
முதியோர்களுக்கு உதவி தொகை உயர்வு, ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் உதவி தொகை, இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, மாணவர்களுக்கு லேப்-டாப் போன்ற எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வெற்றி பெறும் பல திட்டங்களை பார்த்து, அவற்றை மற்ற மாநில முதல்வர்கள் அமல்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி, தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.
விரைவில் வர உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் ஆட்சிக்கு வர முடியாது. எனவே மாநில கட்சியை சேர்ந்த ஒரு தலைவர் தான், நாட்டின் பிரதமராக முடியும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், முதல்வர் ஜெயலலிதாவின் மதிப்பு உயரும். இதன்மூலம் அவர் இந்தியாவின் பிரதமராக பதவி வகிக்க முடியும். எனவே அதிமுக தொண்டர்கள், இதற்கு உறுதுணையாக செயல்பட்டு பாராளுமன்ற தேர்தலில் கட்சிக்கு வெற்றியை பெற்று தர வேண்டும் என்றார்.

Comments