பசும்பொன்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள
முத்துராமலிங்கத் தலைவரின் நினைவிடத்தில் 105வது ஜெயந்தி விழா மற்றும்
50வது குருபூஜை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. 3 நாட்களுக்கு இது
நடைபெறும்.
முன்னதாக இதுகுறித்து தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்தி
மீனாள் நடராஜன் நேற்று கூறுகையில், பசும்பொன் தேவர் நினைவிடத்தில்
ஆண்டுதோறும் ஜெயந்தி விழாவும், குருபூஜை விழாவும் விமர்சையாக நடைபெற்று
வருகிறது.
இந்த ஆண்டு 105-வது ஜயந்தி விழாவும், 50-வது குருபூஜை விழாவும், முப்பெரும் விழாவாக, இன்று தொடங்குகிறது.
முதல்
நாள் (ஞாயிற்றுக் கிழமை) ஆன்மிக விழா நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை 6
மணிக்கு நினைவிட வளாகத்தில் திருவிளக்கு பூஜை உற்சவம் நடைபெற்ற பின்பு,
இரவு 9 மணிக்கு அலங்கார தேரில் தேவர் சிலை பவனி நடைபெறுகிறது.
திங்கள்கிழமை (அக்.29) காலை லட்சார்ச்சனையும், யாக சாலை பூஜையும் நடைபெறுகின்றன. இரவு 10 மணிக்கு நாடகம் நடைபெறுகிறது.
செவ்வாய்க்கிழமை
காலை 6 மணிக்கு 33 அபிஷேகங்களுடன் மகா குருபூஜையை கோவை-காமாட்சிபுரி
ஆதீனம், குரு மகா சன்னிதானம் ஞான குரு சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள்
மற்றும் குழுவினர் நடத்துகின்றனர் என்றார்.
தேவர் குருபூஜையை
முன்னிட்டு ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும்
போலீஸார் விதித்துள்ளனர். அசம்பாவிதங்களையும், கலவரங்களையும் தடுக்க
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
Comments