சென்னைக்கு
அருகே மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை இப்பொழுது
நிலம் புயலாக உருவெடுத்திருக்கிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்
கடந்த மூன்று நாட்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. இம்மழையால் நெய்வேலி
அனல் மின்நிலையத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி கடுமையாகப்
பாதிக்கப்பட்டிருக்கிறது.
நிலக்கரி சுரங்கங்களில் நீர் தேங்கி இருப்பதால்
நிலக்கரி வெட்டி எடுப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது புயல் கரையை
கடக்கும் நிலையில் மழை தீவிரமடையும். இதனால் நிலக்கரி பற்றாக்குறைக்கு
வாய்ப்பு ஏற்படக் கூடும் என்பதால் மின் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று
சுட்டிக்காட்டப்படுகிறது.
இதேபோல் நிலம் புயல் மகாபலிபுரம் அல்லது
கல்பாக்கம் பகுதியில் கரையைக் கடக்கும் என்று எச்சரிக்கை
விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கையாக கல்பாக்கம் அணுமின்
நிலையத்தில் உற்பத்தியை நிறுத்த வாய்ப்பு இருக்கிறது.
நெய்வேலி அனல்
மின் நிலையம் மற்றும் கல்பாக்கம் அணு மின் நிலையங்களில் மின் உற்பத்தி
பாதிக்கப்பட்டால் ஏற்கெனவே மின்வெட்டில் தத்தளிக்கும் தமிழகம் இருளில்தான்
மூழ்கிக் கிடக்க வேண்டும் என்ற அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
Comments