மதுரை இளைய ஆதினமாக நித்யானந்தாவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் நியமித்தார். இவரது அறிவிப்புக்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் மதுரை ஆதினம் நித்யானந்தா நியமன அறிவிப்பில் உறுதியாக இருந்தார்.
நித்யானந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் ஆதீனத்தை, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், அங்கு நடக்கும் வழிபாடுகளுக்கு சென்று வர, போலீஸ் பாதுகாப்பு கேட்டும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களை, நீதிபதிகள் பானுமதி, சுப்பையா அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன், வழக்கறிஞர் கண்ணன், மதுரை ஆதீனம் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால், வழக்கறிஞர் பாலா டெய்சி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், சிறப்பு அரசு பிளீடர் கந்தசாமி, போலீஸ் தரப்பில், சிறப்பு அரசு பிளீடர் இன்பதுரை, ஆஜராகினர்.
இவ்வழக்கில், இன்று , அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், "மதுரை ஆதீனத்தை நீக்குவதற்கு, மதுரையில், சிவில் கோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆதீனத்தின் சொத்துக்களை, அறநிலையத் துறை கமிஷனரின் அனுமதியில்லாமல், விற்கக் கூடாது, என, கோரியுள்ளோம். மதுரையில் உள்ள வழக்குக்கும், இங்குள்ள வழக்குக்கும் சம்பந்தமில்லை' என்றார்.இதையடுத்து, இந்த வழக்கின் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், "டிவிஷன் பெஞ்ச்' தள்ளிவைத்துள்ளது. நித்யானந்த நியமனம் சட்டவிரோதமானது என்றும் விரைவில் அவர் நீக்கப்படுவார் எனவும் தமிழக அரசு ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் கூறியிருந்தது.
நித்யானந்தா நீக்கம்:
இந்நிலையில் இளைய ஆதினம் பொறுப்பில் இருந்து நித்யானந்தாவை நீக்கப்பட்டுள்ளதாக மதுரை ஆதினம் அறிவித்துள்ளார்,
இது
குறித்து மதுரை ஆதினம் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2011ம்
ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி மதுரை இளைய ஆதினமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார்.
அவர் இன்று மாலை முதல் இளைய ஆதினம் பொறுப்பில் இருந்து
நீக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு யார் தூண்டுதலின் பேரிலோ, வற்புறுத்தலின்
பேரிலோ எடுக்கவில்லை. இனி வரும் காலங்களில் ஆதினத்தில் நடக்கும்
நிகழ்ச்சிகளில் மக்கள் கலந்து கொண்டு ஆதினத்தை வலுப்படுத்த வேண்டும் என
கூறினார்.
நித்யானந்தா நீக்கப்பட்டதை தொடர்ந், அவரது ஆதரவாளர்கள் மடத்திலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
உயிருக்கு ஆபத்து:
மதுரை
ஆதினம் சார்பில் போலீசில் புகார் கூறப்பட்டது.. அந்த மனுவில் மதுரை
ஆதினம், நித்யானந்தா வாரிசு பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது
ஆதரவாளர்கள் 10 பேர் மடத்திலிருந்து என்னை கண்காணித்து வருகின்றனர்.
அவர்களது எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. பாதுகாப்பு வழங்க வேண்டும் என
கூறியிருந்தார். இதனையடுத்து மதுரை ஆதின மடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.
முதல்வருக்கு ஆயிரம் நன்றிகள்:
திருநெல்வேலி:
மதுரை ஆதினத்தில் இருந்து நித்யானந்தா நீக்கப்பட்ட நடவடிக்கையை வரவேற்ற
மதுரை ஆதின மீட்பு போராட்டக்குழு தலைவர் நெல்லைகண்ணன்,இதற்காக முதல்வர்
ஜெ.,க்கு ஆயிரம் நன்றிகள் தெரிவிப்பதாக கூறினார்.மதுரை ஆதினத்தின் இளைய
சன்னிதானமாக கடந்த ஆண்டு நித்யானந்தா, நியமிக்கப்பட்டதற்குமுதன்முதலில்
எதிர்ப்பு தெரிவித்தவர் நெல்லை கண்ணன். ஆதினத்தை நீக்குவதற்காக"மதுரை ஆதின
மீட்பு குழு' என்ற பெயரில் தமது தலைமையில் இயக்கம் நடத்தினார். இதற்காக
நெல்லை,மதுரை உள்ளிட்ட இடங்களில் பேரணியும் நடத்தப்பட்டது. நித்யானந்தாவை
நீக்குவதாக ஆதினம் அருணகிரிநாதர் அறிவித்துள்ளது குறித்து நெல்லைகண்ணனிடம்
கேட்டபோது, " நித்யானந்தா, மதுரை மடத்திற்குள் வரும்போதே இத்தகைய விபரீத
நிகழ்வுகள் நடக்கும் என்பதை எதிர்பார்த்தோம். மதுரை ஆதினத்தின் உயிருக்கு
நித்யானந்தாவால் ஆபத்து உள்ளது என்பதையும் ஆரம்பித்தில் இருந்தே
குறிப்பிட்டுவந்தோம். தற்போது கோர்ட் வழக்குகளின் முடிவுகளும்
நித்யானந்தாவுக்கு எதிராகவே இருக்கும் சூழலில்ஆதினம் அவரை நீக்கும் முடிவை
அறிவித்துள்ளார். இதனை ஆதின மீட்பு குழு வரவேற்கிறது.இந்த நீக்கம் தமிழக
அரசின் நடவடிக்கையால்தான் நடந்துள்ளது. இதற்காக முதல்வர் ஜெ.,க்கு
ஆயிரம்நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நித்யானந்தாவிடம் பல இளைஞர்கள்
சிக்கித்தவிக்கிறார்கள். திண்டுக்கல்லை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர்
ஒருவர், கன்னியாகுமரியை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் என பலரும்
நித்யானந்தாவின்போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் குடும்பங்களையும்
விட்டுவிட்டு சென்றுள்ளனர். எனவே நித்யானந்தாவிடம் அடிமைப்படுத்தப்பட்டுள்ள
இளைஞர்கள் மீட்கப்படவேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்.மேலும்
நித்யானந்தா மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படவேண்டும் என்றார்.
Comments