ஒபாமா, ரோம்னியை விடுங்க, ஜெயலலிதா, கருணாநிதி சந்திச்சா எப்படி விவாதிப்பாங்க?

சென்னை: ஓட்டு கேட்டு தனித்தனியாக மக்களை சந்திப்பது நம் நாட்டு கலாச்சாரம். அமெரிக்காவிலோ அதிபர் பதவிக்கு போட்டியிடும் இரண்டு தலைவர்களும் நேரடியாக விவாதிப்பது சுவாரஸ்யம். இதெல்லாம் நம்ம ஊரில் சாத்தியமில்லை. இருந்தாலும் முதல்வர் ஜெயலலிதாவும் திமுக தலைவர் கருணாநிதியும் லைவ் ஆக டிவி விவாதத்துக்கு வந்தால், என்ன பேசிக் கொள்வார்கள்.. கற்பனை பண்ணிப் பார்ப்போமா... காசா, பணமா!


கேஸ், கேஸா போடுறாங்க யுவர் ஆனர்!

மு.க. : அம்மையார் எப்பொழுதும் எங்கள் கழக உடன்பிறப்புக்களை சிறையில் போடுவதையே தலையாய கடமையாக கொண்டிருக்கிறார். ஆனாலும் அவர் ஏவிய குண்டர் சட்டத்தை பெரியார், அண்ணாவின் துணை கொண்டு தடந்தோள் கொண்ட கழகக் கண்மணிகள் தவிடு பொடியாக்கி விட்டனர் உடன் பிறப்புகளே...
ஜெ.: மிஸ்டர் கருணாநிதி, வெயிட். எங்கள் மீதும் சொத்துக் குவிப்பு வழக்குப் போட்டீங்கள்ல.. நாங்களும் அதை வெற்றிகரமா சந்திக்கிறோமோ.. விடாமல் வருடக்கணக்கில் வாய்தா வாங்கிக் கொண்டுதானே இருக்கோம்?

பாலம் பாலமா கட்டினோமே

மு.க.: கழகக் கண்மணிகாள், நமது ஆட்சியில் அதிக அளவில் பாலங்கள் கட்டினோம். நூலகம், சட்டமன்றம் எல்லாம் புதுசா கட்டினோம் என்பதை மறந்து விடாதே மறந்தும் இருந்து விடாதே...
ஜெ.: நாங்க மட்டும் சும்மா இல்லையே, பாலம் கட்டியதில் நடந்த ஊழல்களை வெளியே கொண்டு வர பாலம் கட்டியவர்கள் மீது வழக்கு போட்டோமே. புது கட்டிடத்தை எல்லாம் நாங்க மருத்துவமனையாக மாத்தி சாதனை படைக்கலையா?.

விலை உயர்வுதான் சாதனை

மு.க.: அம்மையார் ஆட்சிக்கு வந்த உடன் பால் விலை, பேருந்து கட்டணம், மின் கட்டணம் உயர்ந்ததுதான் சாதனை, மக்களுக்குக் கிடைத்தது வேதனை, வேதனை, வேதனை.
ஜெ. : இது கருணாநிதி திட்டமிட்டு பரப்பும் பொய்ப் பிரச்சாரம். டோன்ட் பிலீவ் திஸ். கருணாநிதி காலத்தில் நஷ்டத்தில் இயங்கிய நிறுவனங்களை லாபத்தில் இயங்க வைக்கவே நான் விலையை உயர்த்த வேண்டியதாகிவிட்டது. சோ.. இந்த விலை உயர்வுக்கு காரணமே கருணாநிதி தான். இதை எனக்கு மேலும் மேலும் வெற்றிகளைத் தர காத்திருக்கும் மக்களுக்கே நல்லா தெரியும்.

இலவசம் கொடுத்தோமே?

மு.க.: நாட்டில் என்ன நடக்கிறது, அரசியல் எப்படி நாறிப் போயிருக்கிறது என்பது பற்றி மக்கள் கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் சினிமா, சீரியல் பார்த்து கவலைகளை மறக்கவும் தான் டிவி இலவசமாக கொடுத்தோம், அதுவும் என் பெயரில்.
ஜெ.: அதே டிவியிலதானே நாங்க ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி மக்களுக்குத் தெரிய வச்சோம். ஆனா இப்பதான் கரண்ட் இல்லாம போச்சே. இல்லைன்னா குடும்ப சண்டையை லைவ் ஷோ போட்டிருப்போம். டிஆர்பி எகிறியிருக்கும், உங்களுக்கும் பிபி கூடியிருக்கும்.

கரண்ட் கட் பண்றோமே!

மு.க. : நாங்க 3 மணிநேரம்தான் கரண்ட் கட் பண்ணோம். ஆனால் அதற்கே மக்கள் எங்களை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கிவிட்டார்கள், என்ன கொடுமை தமிழா...
ஜெ. : இதென்ன பெரிய அதிசயம் நாங்க 16 மணிநேரம் கரண்ட் கட் பண்றோமே. (சுதாரித்துக் கொண்டு) ஆனால், இதற்கு கருணாநிதியின் முந்தைய ஆட்சிதான் காரணம்.

கடைசியில் சூரியன்தான் கை கொடுப்பான்!

மு.க.: அம்மையார் இப்போது 'சூரிய' ஒளி மூலம் 3000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப் போவதாக கூறுவதைப் பார்க்கும் போது கடைசியில் "சூரியன்'' தான் எதற்கும் கை கொடுக்கும் என்பதை உலகத் தமிழரே உணர்வீர், உணர்ச்சி பெறுவீர்...
ஜெ. : அடடே, அப்டியா... அப்டீன்னா, சூரிய ஒளியை விட்டுட்டு சந்திர ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க முடியுமா என்று ஆராய்ச்சி செய்யப் போகிறோம். இதற்காக அமெரிக்காவின் நாஸா விஞ்ஞானிகளுடன் விவாதிக்க ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஒரு டீம் அமெரிக்கா போகும்.
(நிகழ்ச்சியை பார்க்க டிவி நிலையத்துக்கு வந்து முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஓ.பன்னீர்செல்வம் அருகே இருந்த மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் திரும்பி, 'நாஸா'.. அப்படீன்னா என்ன? என்று கேட்க, விஸ்வநாதன் இரண்டு சேர் தள்ளி போய் உட்கார்ந்து கொள்கிறார்)

பதவி எப்ப வரும்னு தெரியாது, ஆனா போறப்ப கரெக்டா போயிடும்

மு.க. : குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பதவி கொடுப்பது எங்கள் கட்சியின் சாதனை.
ஜெ. : யாருக்கு எப்போ பதவி கிடைக்கும். யாருடைய பதவியை பறிப்போம் என்பதை நமது எம்.ஜி.ஆர் பார்த்தோ, ஜெயா டிவியில் ப்ளாஸ் நியூஸ் பார்த்தோ தெரிந்து கொள்ள முடியும். அது எங்களின் சாதனை.

நாங்க மட்டும் எப்படி நிறைவேற்ற முடியும்!

மு.க.: எத்தனை முறை ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு என்ன தேவை என்பதை கடைசி வரைக்கும் நிறைவேற்றவே மாட்டோம். இதை திணவெடுத்த தோள் கொண்ட தமிழர்கள் அறிவார்கள்...
ஜெ.: 5 முறை ஆட்சிக்கு வந்த கருணாநிதியே மக்களின் தேவையை நிறைவேற்றாத போது 3 முறை ஆட்சிக்கு வந்த எங்களால் மட்டும் எப்படி நிறைவேற்ற முடியும்?. ஓ.கே. ஐ அம் கெட்டிங் லேட், கொடநாடு போக ஹெலிகாப்டர் வெயிட்டிங்ல இருக்கு.. வில் சீ யூ லேட்டர்...அண்ணா நாம் வாழ்க, புரட்சித் தலைவர் நாமம் வாழ்க...!

நிகழ்ச்சியை நடுவராக இருந்து நடத்திய டி.ராஜேந்தர் இறுதியில் பேசுகையில்,

நீங்க மாறி மாறி இவுங்களுக்கு போட்டீங்க ஓட்டு..
இவுங்க குடுத்த வாக்குறுதியை கேட்டு..
எப்பவுமே ஆகுறது கரண்டு ஆஃப்பு
உங்களுக்கே மாறி மாறி வச்சுக்கிட்டீங்க ஆப்பு!...
எங்கேயோ போயிருச்சி விலைவாசி..
இந்த முறை கொஞ்சம் மாத்தி யோசி..
தொடர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்தபோதே டிவி நிலையத்தில் கரண்ட் கட்!.. 3 நாட்கள் இரவு பகலாக மின்சாரம் இல்லாததால் தொடர்ந்து ஜெனரேட்டரை ஓட்டியதால் அதுவும் புகைந்துவிட, தடங்கலுக்கு வருந்துகிறோம்!!

Comments