உடன்பிறப்புக்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அ.தி.மு.க.வினரால்
தங்கள் துண்டுப் பிரசுரத்தில் தவிர்க்கப்பட்ட "சாதனை(?)களை" அடுத்த
பிரசுரத்தில் சேர்ப்பதற்காக சிலவற்றை நான் பட்டியலிட்டுள்ளேன்.
இடமாற்ற சாதனை
கடந்த
ஆட்சிக் காலத்தில்600 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டு கட்டப்பட்ட தலைமைச்
செயலகத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று இட நெருக்கடிக்கிடையே பழைய தலைமைச்
செயலகத்திலேயே தொடர்ந்து இருக்கின்ற இமாலயச் சாதனை!
பாவேந்தர் செம்மொழித் தமிழ் ஆய்வு நூலகத்தை ஆட்சிக்கு வந்த நாளிலேயே வெளியே தூக்கி எறிந்த வியத்தகு சாதனை!
திமுக
ஆட்சியில் கட்டப்பட்டு பாதியில் நின்றிருந்த தலைமைச் செயலகத்தின் இரண்டாம்
கட்டமாக நிறைவேற்ற வேண்டிய கட்டிடங்கள், "கலைவாணர் அரங்கப்" பணிகள்
ஆகியவற்றைத் தொடராமலும்; அதுபற்றிக் கொஞ்சமும் சிந்திக்காமலும், கிடப்பிலே
போட்ட கித்தாப்புச் சாதனை!
ஆசியாவிலேயே மிகப் பெரியதும், அண்ணா
நூற்றாண்டு நிறைவை யொட்டி அதன் நினைவாக சென்னை கோட்டூர்புரத்தில்
கட்டப்பட்டதுமான நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவதாக அறிவித்த
மாபெரும் சாதனை!
சமச்சீர் கல்வி சாதனை
ஏழை
மாணவர்கள் - வசதி படைத்த மாணவர்கள், நகர்ப்புறத்து மாணவர்கள்-
கிராமப்புறத்து மாணவர்கள் என்று வழிவழி வந்த வேறுபாடுகளை அகற்றும் சமச்சீர்
கல்வி முறைக்கு 23.5.2011 இல் தடை விதித்த தனிப் பெரும் சாதனை.
சமச்சீர் கல்விக்காக 200 கோடி ரூபாய் செலவழித்து அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையெல்லாம் விநியோகிக்காத விண்ணுயர் சாதனை!
ஆசிரியர்கள்
நியமனத்திலும், ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்குவதிலும் குளறுபடிகளை
ஏற்படுத்தி, அதில் ஆளுங்கட்சியினர் குளிர் காய்ந்த குதூகலச் சாதனை!
சத்துணவுப் பணியாளர்கள், அங்கன் வாடிப் பணியாளர்கள் நியமனங்களில் ஆளுங்கட்சியினர் புகுந்து விளையாடிய அற்புத சாதனை!
20 மணிநேர மின்வெட்டு சாதனை
இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு நாள் ஒன்றுக்கு 20 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு செய்த மின்னல் வேகச் சாதனை.
வரலாறு
காணாத மின்வெட்டு காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழில்முனைவோர்,
விசைத்தறியாளர், தொழிலாளர்கள் பாதிப்புக்கு ஆளாகி; ஆயிரக்கணக்கான கோடி
ரூபாய் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு; தெருவுக்கு வந்து போராடும்
திகைப்பூட்டும் சாதனை!
திமுக ஆட்சிக்காலத்தில் திட்டமிட்டு பணிகள்
தொடங்கப்பட்ட மேட்டூர் புதிய அனல் மின்நிலையம், வடசென்னை அனல்மின் நிலையம் -
யூனிட் (1), வடசென்னை அனல்மின்நிலையம் யூனிட் (2), வல்லூர் யூனிட் (1),
வல்லூர் யூனிட் (2), வல்லூர் யூனிட்(3), தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில்
புதிய யூனிட் ஆகியவற்றை; திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டவை என்ற ஒரே
காரணத்திற்காக, உரிய காலத்தில் மின்உற்பத்தி செய்வதில் அக்கறை காட்டாத அபார
சாதனை!
பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்" என்ற வகையில் கூடங்குளம் அணுமின்நிலையப் பிரச்சினையில் இரட்டை வேடம் போட்ட இணையிலாச் சாதனை!
அண்ணா பல்கலைக்கழக ரத்து சாதனை
தமிழகத்தில்
பொறியியல் உயர்கல்வி பரவலாக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளில் உள்ளோர்
பயனடையும் பொருட்டு; திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில்
திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழகங்களை ரத்துசெய்து
உருக்குலைத்த ஒப்பற்ற சாதனை!
ஏழை எளியோருக்குப் பயன் தரும் எந்த இலவசத் திட்டத்தையும் முழுமையாகச் செயல்படுத்தாத முக்கியச் சாதனை!
அமைச்சர்கள் அதிகாரிகள் பந்தாடப்படும் சாதனை
இதுவரை
எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு அமைச்சர்களை அடிக்கடி மாற்றி,
அமைச்சர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையும், நிரந்தர நடுக்கமும்
நிலவுவதற்கு வழிவகுத்த நிகரற்ற சாதனை!
எந்த இடத்திலும் காலூன்ற முடியாத அளவுக்கு அதிகாரிகளை அடிக்கடிப்பந்தாடும் அநியாய சாதனை!
குறுவைச் சாகுபடியைக் கனவாக்கி, சம்பாச் சாகுபடியையும் ஏக்கத்திற்கு உள்ளாக்கிய இணையில்லாச் சரித்திரச் சாதனை!
பால்விலை
உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, அரிசி உள்ளிட்ட
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு என்று ஏழை எளிய நடுத்தரமக்களை
வாட்டி வதைத்திடும் வளமான(?) சாதனை!
சிறைக்கு அனுப்பியதில் சாதனை
கட்சி
மாச்சரியத்தோடு, நில அபகரிப்பு என்ற பெயரால் முன்னாள் அமைச்சர்கள்,
மாவட்டக் கழகச் செயலாளர்கள், திமுக முன்னணியினர் மீது சட்ட
விதிமுறைகளுக்குப் புறம்பாகப் பொய்யான வழக்குகளைத் திரும்பத் திரும்பத்
தொடுத்து கைது செய்து சிறையிலே அடைத்த சிறப்பான சாதனை!
மதுபான உற்பத்தியாளர்கள் மேலும் லாபம் சம்பாதிக்க ஏதுவாக, மது பானங்களின் விலையை உயர்த்திய மாபெரும் சாதனை!
போலீசாரின் அடிதடி சாதனை
கொலை
இல்லாத நாட்களே இல்லை; கொள்ளை நடக்காத ஊர்களே இல்லை; வழிப்பறி நடக்காத
சாலைகளே இல்லை; பெண்கள் வெளியே புறப்பட்டால் கழுத்திலே உள்ள தாலிச்
சங்கிலிகள் நிலைத்திருக்குமா என்பதே கேள்விக்குறி; போலீஸ் தடியடி,
கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச் சூடு என்று சட்டம் - ஒழுங்கு நிலையைப்
படாதபாடு பட வைத்த பரவச சாதனை!
பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு
காணவேண்டிய பிரச்சினைகளுக்குக் கூட போலீஸ் படையை அனுப்பி அடக்குமுறை மூலம்
தீர்வு காண முயற்சிக்கும் அரிய சாதனை!
இந்திய அரசியலமைப்புச்
சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை
நெரித்திடும் வகையில்; ஆட்சியினரையும் அவர்தம் செயல்பாடுகளையும்
ஆரோக்கியமான முறையில் விமர்சனம் செய்திடும் எதிர்க்கட்சித் தலைவர்கள்
மீதும், பத்திரிகைகள் மீதும் வழக்குத் தொடுத்து அச்சுறுத்த நினைக்கும் அபார
சாதனை!
Comments