நேற்று மொத்தம் 2
போட்டிகள் நடந்தன. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவும்
மோதின. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே நல்ல ரன் ரேட்டுடன் இருந்ததால் அதற்குப்
பிரச்சினை இல்லை. அதேசமயம்,
பாகிஸ்தான் அணி கட்டாயம் வென்றாக வேண்டிய நிலை.
ஒரு வேளை பாகிஸ்தான் அணி வெல்லும் நிலை ஏற்பட்டால், ஆஸ்திரேலிய அணி 112
ரன்களை எடுத்தால் போதுமானது என்ற இலக்கும் இருந்தது.
இப்படிப்பட்ட
நிலையில்தான் பாகிஸ்தான் கேப்டன் முகம்மது ஹபீஸ் அபாரமான ஐடியாவுடன்
களத்தில் இறங்கினார். அதாவது 5 சுழற்பந்து வீசசாளர்களையும் ஒரே ஒரு வேகப்
பந்து வீச்சாளரையும் அவர் பயன்படுத்தினார். அவரது இந்த டெக்னிக்குக்கு நல்ல
பலன் கிடைத்தது.
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தானின் சுழலை
சந்திக்க முடியாமல் திணறினர். 18 ஓவர்களுக்கும் சுழற்பந்து வீச்சை மட்டுமே
நேற்று பாகிஸ்தான் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. வேகப்பந்து
வீச்சாளர் உமர் குல்லுக்கு 2 ஓவர்களை மட்டுமே கொடுத்தார் ஹபீஸ்.
இதற்கு
நல்ல பலனும் கிடைத்தது. 150 என்ற இலக்குடன் 2வதாக ஆடிய ஆஸ்திரேலிய அணி
சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்களில் வீழ்ந்து விட்டது.
அதேசமயம், 112 ரன்கள் என்ற இலக்கையும் தாண்டி விட்டது. இதனால் அது
தோற்றாலும் கூட அரை இறுதிக்குள் எளிதில் போய் விட்டது.
மறுபக்கம்
பாகிஸ்தான் அணி அபாரமாக வென்று விட்டாலும் கூட இந்தியா வெல்கிறதா,
தோற்கிறதா என்று காத்திருந்தது. காரணம், ஒரு வேளை இந்தியா பெரிய ரன்
வித்தியாசத்தில் வென்று விட்டால், பாகிஸ்தான் வெளியே போக நேரிடும் நிலை.
ஆனால் இந்தியா அத்தனை பேரையும் ஏமாற்றி விட்டு மகா சாதாரணமான வெற்றியைப்
பெற்றதால் பாகிஸதான், பெட்டர் ரன் ரேட்டுடன் அரை இறுதிக்குள் போய் விட்டது.
இந்தியா மூட்டை கட்டப்பட்டது.
பாகிஸ்தான் கேப்டன் ஹபீஸின் உத்தியை
டோணி மட்டும் நேற்று கடைப்பிடித்திருந்தால் நிச்சயம் இந்தியாவுக்கு வெற்றி
கிடைத்திருக்கும். ஆனால் அவர் எடுத்த எடுப்பிலேயே வேகப்பந்து வீச்சுக்குப்
போய் விட்டார். அது முதல் தவறு. மேலும் முதல் 6 ஓவர்களை வேகப் பந்து
வீச்சில் வேஸ்ட் செய்ததால், தென் ஆப்பிரிக்கா நல்ல ஸ்கோரை எட்டி விட்டது.
மேலும்
ஹர்பஜனையும், அஸ்வினையும் அவர் சரிவர பயன்படுத்தவில்லை. மேலும், பார்மில்
உள்ள வேகப் பந்து வீச்சாளர் பாலாஜியை கடைசி நேரத்தில்தான் பந்து வீச
அழைத்தார் டோணி. அதுவும் ஒரு பெரிய தவறாகப் போய் விட்டது.
நேற்று
சுழற்பந்து வீச்சாளர்களை அதிக அளவில் டோணி பயன்படுத்தத் தவறியதால்தான்
பெரிய நஷ்டத்தை நாம் சந்திக்க வேண்டியதாகி விட்டது என்பது ரசிகர்களின்
குற்றச்சாட்டாக எழுந்திருக்கிறது. பாகிஸ்தானைப் பார்த்தாவது நாம் அப்படியே
பின்பற்றியிருந்தால் நிச்சயம் பெரிய வெற்றியைப் பெற்று அரை இறுதிக்குள்
போயிருக்கலாம், பாகிஸ்தானை வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும்
ரசிகர்கள் புலம்புகிறார்கள்.
Comments