துரோகிகளுக்கு பூமியில் எங்குமே இடம் கிடையாது.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்

 No Place Backstabbers On Earth Says Premalatha மதுரை: துரோகிகளுக்கு பூமியில் எங்குமே இடம் இல்லை. எப்போதும் துரோகிகள் குறித்துப் பேசி நேரத்தை வீணாக்க வேண்டும் என்று கேப்டன் விஜயகாந்த் விரும்பியதில்லை என்று பேசியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
தேமுதிக மகளிர் அணி அமைப்பாளரான பிரேமலதா மதுரையில் நடந்த பக்ரீத் விழாவின்போது பேசுகையில்,
உலகில் குழந்தைகள் பிறப்பதற்கு அடையாளமாக இருப்பது கடவுள். அந்த குழந்தைக்கு முகவரி கொடுப்பது தாய், தந்தை.
அதுபோல அரசியலுக்கு வருபவர்களுக்கு முகவரி கொடுப்பது அந்த கட்சியின் தலைமைதான். அதன்படி நமது தலைவரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் பலர் உள்ளனர்.
இந்த தொகுதியின் எம்.எல்.ஏ. இவர்தான் என்று தலைவர் முகவரி வழங்கிய நிலையில் அவருக்கே துரோகம் செய்தவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல பூமியில் எங்கும் அவர்களுக்கு இடம் இல்லை என்று மக்கள் உணர்த்துவார்கள். எப்போதும் துரோகிகள் குறித்து பேசி நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைப்பவர் நமது கேப்டன்.
ஜெயலலிதாவை சந்தித்த பிறகு தமிழகத்தில் நடப்பது சிறந்த ஆட்சி, சிறந்த முதல்வர் என்று பேட்டி கொடுக்கிறார்கள் அந்த எம்.எல்.ஏ.க்கள். எங்கள் தொகுதியின் குறைகளை சரிசெய்வதாக கூறினார்கள் என்றும் சொன்னார்கள். அது நடக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
தங்கள் பாதுகாப்புக்காக, வருமானத்துக்காக சுயநலத்துடன் கட்சியை விட்டு செல்கிறார்கள். எதிரிகளை ஏற்றுக் கொள்வோம். துரோகிகளை ஒருபோதும் கழகம் மன்னிக்காது. எதிர்காலத்தில் தமிழக மக்கள் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.

Comments