சென்னை: மதிமுகவில் இருந்து அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்
நாஞ்சில் சம்பத் வெளியேற போவதாக வெளியாகி உள்ள செய்தி, அரசியல்
வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாஞ்சில் சம்பத்
தமிழகத்தின் சிறந்த அரசியல்வாதி. சிறந்த பேச்சாளர் மற்றும் சிறந்த
எழுத்தாளர். கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளை எனும் ஊரில் பாஸ்கரன், கோமதி
தம்பதியருக்கு மகனாக பிறந்தவர்.
சிறு வயதிலேயே பேச்சில் சிறந்து
விளங்கிய இவர் திமுகவில் தலைமைக் கழக பேச்சாளராக இருந்தார். வைகோ திமுகவில்
இருந்து வெளியேற்றப்பட்ட போது இவரும் வெளியேறினார்.
தமிழக இலக்கிய
அரங்கில் முக்கிய பேச்சாளராகவும், இரண்டாம் கட்ட தலைவர்களில் மிக சிறந்த
பேச்சாளராகவும் உள்ளார். இவர் மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக
தற்போது பதவி வகித்து வருகிறார்.
தமிழகத்தில் அதிமுக, திமுக
ஆட்சிகளின் போது, இவர் மீது போடப்பட்ட வழக்குகளில் பலமுறை சிறைக்கு
சென்றுள்ளார். கடந்த 1.3.2009 அன்று திருப்பூரில் ‘நாதியற்றவனா தமிழன்?'
என்ற தலைப்பில், அனைத்து மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த
கூட்டத்தில் பேசினார்.
இதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக
நாஞ்சில் சம்பத், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது நாஞ்சில் சம்பத்துக்காக மதிமுகவின்
பொதுச் செயலாளர் வைகோ, நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். அந்த அளவு
நாஞ்சில் சம்பத் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார் வைகோ.
அதேபோல்
கடந்த காலங்களில் மதிமுகவில் இருந்து நாஞ்சில் சம்பத்தை பிரிக்க பலரும்
எண்ணிய போதும், பணத்திற்கும், பதவிக்கும் தான் மயங்காதவன் என்று நாஞ்சில்
சம்பத் கூறினார். மேலும் என் உயிர் உள்ளவரை வைகோ தான் கதி என்று உறுதியாக
சொன்னார்.
இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே, சாஞ்சிக்கு வந்த
போது, அங்கு செல்ல நாஞ்சில் சம்பத்திற்கும் அழைப்பு கொடுக்கப்பட்டதாம்.
ஆனால் அதை தவிர்த்து துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு நாஞ்சில்
சம்பத் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதை அவர் முறையாக வைகோவிடம்
தெரிவிக்கவில்லையாம்.
இந்த சம்பவம் தற்போது நாஞ்சில் சம்பத், வைகோ
இடையே இருந்த நெருக்கத்தை குறைத்து, அரசியலில் பிளவை ஏற்படுத்திவிட்டதாக
கூறப்படுகிறது. இது குறித்து தமிழக அரசியிலில் அரசல் புரசலாக தகவல் வெளியான
போதும், இதை வைகோவோ, நாஞ்சில் சம்பத்தோ மறுக்க இல்லை. இந்த தகவலை
பரப்பியவர்களை கண்டிக்கவும் இல்லை.
இதனால் மதிமுக தொண்டர்கள் மன
வேதனையில் உள்ளனர். இந்த விவகாரம் எங்கு சென்று முடியுமோ என்று கட்சி
ஆதரவாளர்கள் திகைப்பில் உள்ளனர். இது குறித்து வைகோவும், நாஞ்சில்
சம்பத்தும் மட்டுமே இறுதி முடிவு எடுத்து கட்சியினரின் குழப்பத்திற்கு
முற்றுப்புள்ளி வைப்பார்களா?
Comments