அரை
இறுதிக்குப் போக வேண்டுமானால் இந்தியா நல்ல வித்தியாசத்தில் ஜெயிக்க
வேண்டும்
என்ற நிலையில் நேற்று இருந்தது. அதாவது குறைந்தது 31 ரன்கள்
வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டிய நிலை. இந்த நிலையில் கொழும்பில் நடந்த
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது இந்தியா.
பெரிய அளவில்
ரன் குவிக்க வேண்டுமே என்று ரசிகர்கள் வேண்டிக் கொண்டு மேட்ச்சைப்
பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பி விட்டனர்.
கம்பீர் 8 ரன்களிலும், ஷேவாக் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விராத் கோஹ்லி 2
ரன்களுடன் வெளியேறியபோது பாதி ரசிகர்களுக்கு இதயமே நின்று போனது.
இருப்பினும்
ரோஹித் சர்மா சற்றே சுதாரித்து ஆடி 25 ரன்களைத் தொட்டார். யுவராஜ் சிங்
தன் பங்குக்கு 21 ரன்களைச் சேர்த்தார். கேப்டன் டோணியும், சுரேஷ்
ரெய்னாவும் சற்று சுதாரிப்பாக ஆடி ரன்களைக் குவிக்க ஆரம்பித்தனர்.
இவர்களில் டோணி கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. ரெய்னா 45 ரன்களைச்
சேர்த்தபோது ரன் அவுட் ஆனார். டோணி 23 ரனிகளைச் சேர்த்தார்.
இறுதியில்
20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களைச் சேர்த்தது இந்தியா.
தொடக்க ஆட்டக்காரர்களும், மிடில் ஆர்டரிலும் சிறப்பாக பேட் செய்திருந்தால்
பெரிய ஸ்கோரை இந்தியா எட்டியிருக்க முடியும்.
இதையடுத்து பேட் செய்ய
வந்தது தென்ஆப்பிரிக்கா. அந்த அணியை 121 ரன்களுக்குள் சுருட்டினால்தான் அரை
இறுதிக்குப் போக முடியும் என்ற கஷ்டமான இலக்குடன் இந்தியா பவுலிங் செய்ய
ஆரம்பித்தது.
அடுத்தடுத்து தவறு செய்த டோணி
இந்த நிலையில்தான் தொடர்ந்து பல்வேறு தவறுகளைச் செய்ய ஆரம்பித்தார் கேப்டன் டோணி.
சுழற்பந்துவீச்சை
முதலில் எடுக்காமல் வேகப் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஜாகிர்கானையும்,
இர்பான் பதானையும் முதல் 6 ஓவர்களுக்குப் போட வைத்தார். இது தென்
ஆப்பிரிக்காவுக்கு வசதியாகப் போய் விட்டது. வேகப் பந்து வீச்சை நொறுக்க
ஆரம்பித்தனர்.
எடுத்த எடுப்பிலேயே 2வது பந்தில் ஹஷீம் அம்லா
முட்டையுடன் வெளியேறினார். தொடர்ந்து காலிஸ் 6 ரன்களில் அவுட்டானார்.
டிவில்லியர்ஸும் 13 ரன்களில் வெளியேறினார். இருந்தாலும் தென் ஆப்பிரிக்க
அணி நிலைகுலையவில்லை. இந்தியாவுக்கு எமனாக வந்து சேர்ந்தார் டுப்ளசிஸ்.
அதிரடியாக
ஆடிய அவர் சரமாரியாக ரன்களைக் குவித்து இந்தியாவின் கனவை சிதறடித்து
விட்டார். அவரது அபாரமான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்க அணி தொடர் விக்கெட்
வீழ்ச்சியை சமாளித்து 122 ரன்களைக் கடந்து இந்தியர்களை நொறுங்கச் செய்து
விட்டது. இனி அரை இறுதி வாய்ப்பு அவ்வளவுதான் என்பது உறுதியானதும் இந்திய
ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்து விட்டனர். பலர் ஸ்டேடியத்தை விட்டும்
வெளியேறினர்.
இருப்பினும் இந்திய அணி, குறைந்தது வெற்றியையாவது பெறுவோம் என்ற இலக்குடன் விளையாடியது.
கடைசி
நேரத்தில் களமிறக்கப்பட்டாலும் வேகப் பந்து வீச்சாளர் பாலாஜி சிறப்பாக
பந்து வீசி 3 விக்கெட்களைச் சாய்த்தார். அதுவும் அவர் வீசிய கடைசி ஓவர்தான்
இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள்
எடுத்தால் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி என்ற நிலையில் அபாரமாக பந்து வீசி
மார்னி மார்கலை அவுட்டாக்கி இந்தியாவுக்கு ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி
தேடித் தந்தார் பாலாஜி.
இந்தப் போட்டியில் நாம் ஜஸ்ட் வென்றாலும்
கூட ரன் ரேட் அடிப்படையில் நமக்கு அரை இறுதிக்கான வாய்ப்பு பறி போய்
விட்டது. ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் அரை இறுதிக்குத் தகுதி பெற்று
விட்டன. இத்தனைக்கும் நேற்று ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானிடம் பரிதாபமாக
தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெளியேற்றத்தின் மூலம் 2007க்குப் பிறகு தொடர்ந்து நாம் சூப்பர் 8 சுற்றோடு வெளியேறி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments