பெங்களூர்: காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்படுவதை
கண்டித்து இன்று கர்நாடகத்தில் முழு அளவில் பந்த் நடந்தது. இதனால்
பெங்களூர் நகரமே வெறிச்சோடியது.
சிறிய கடைகள் கூட இயங்கவில்லை.
காலையில் பால் வினியோகிக்கும் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு 8 மணியோடு
மூடப்பட்டுவிட்டன. மற்ற கடைகள், ஹோட்டல்கள், பேக்கரிகள், வர்த்தக
நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
பந்த்தையொட்டி மிக மிகக்
குறைவான அரசுப் பேருந்துகளே இயங்கப்பட்டன. அதிலும் கூட 4,5 பயணிகளே
இருந்தனர். ஆனால், காலை 9 மணிக்குள் 15 பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்
நடந்துள்ளது. இதில் ஒசூர் ரோட்டில் உள்ள சில்க் போர்ட் அருகே 2 பஸ்களும்
பொம்மனஹள்ளியில் சில பஸ்களும், மடிவாளா ஆஞ்சனேயர் கோவில் அருகில் ஒரு
பஸ்சும் தாக்குதலுக்கு உள்ளாயின. இதையடுத்து பஸ்களின் எண்ணிக்கை மேலும்
குறைக்கப்பட்டுவிட்டது.
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. பந்த்துக்கு மாநில அரசும் ஆதரவு தந்ததால் அரசு அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தன.
குறைந்த
அளவிலான ஆட்டோக்களே இயங்கின. டாக்ஸிகள் இயங்கவில்லை. விமானங்கள்
இயக்கியதால் விமான நிலையத்துக்குச் செல்லும் டாக்ஸிகள் மட்டுமே ஓடின.
வாகனங்களின் டயர்களை கழற்றி கலாட்டா:
ஆனால்,
இந்த டாக்ஸிகளை விமான நிலைய சாலையில் மேக்ரி சர்க்கிள் அருகே வழிமறித்த
கன்னட அமைப்பினர் அவற்றின் டயர்களைக் கழற்றிச் சென்றுவிட்டனர். இதனால்
அதிலிருந்த பயணிகள் அச்சத்தில் உறைந்து போயினர்.
போதிய டாக்சிகள்
இல்லாததால் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் முடங்கிய பயணிகளுக்கு உணவு
வசதிகளை விமான நிலைய நிர்வாகமே செய்து தந்தது.
அதே போல சாலைகளில் செல்லும் கார்கள், பைக்குகளைக் கூட சிலர் தடுத்து காற்றை வெளியேற்றியும், டயர்களைக் கழற்றியும் சென்றனர்.
பந்துக்கு
பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்து மாலை 6 மணி வரை பெட்ரோல்
பங்குகளை மூடிவிட்டனர். அதே போல கேஸ் சிலிண்டர்கள் வினியோகமும்
நிறுத்தப்பட்டுவிட்டது.
ரயில்கள் வழக்கம்போல் இயக்கின. ஆனால்,
பெங்களூர் வந்திறங்கிய பயணிகள் போதிய பஸ்கள், ஆட்டோக்கள் இல்லாததால்
சொல்ல முடியாத அளவுக்கு பெரும் சிரமத்துக்குள்ளாகியினர். அதே போல
பெங்களூரில் இருந்து கிளம்பும் ரயில்களில் பல காலியாகவே சென்றன.
பெங்களூரில்
மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கினாலும் அதில் பயணிகளே இல்லை.
எம்.ஜி.ரோட்டில் மெட்ரோ ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 500 பேர்
கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி ரயில் மறிப்பு:
இந்
நிலையில் மாநிலத்தில் பல இடங்களில் ரயில் மறியல் போராட்டங்களும் நடந்தன.
தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை பெங்களூரை அடுத்த
ராம்நகரில் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் போலீசார்
வந்து போராட்டக்காரர்களை அகற்றினர். இதையடுத்து ரயில் புறப்பட்டுச்
சென்றது.
அதே போல பெங்களூர்-மரிக்குப்பம் ரயில் உள்பட பல்வேறு ரயில்களும் ஆங்காங்கே மறிக்கப்பட்டு, தாமதமாகச் சென்றன.
பெங்களூர் முழுவதும் வர்த்தக வளாகங்கள், மால்கள், தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
மார்க்கெட்களில் தாக்குதல்:
காலையில்
திறந்திருந்த கே.ஆர்.மார்க்கெட் உள்ளிட்ட சில மார்க்கெட்டுகளில் நுழைந்த
பந்த் ஆதரவாளர்கள் கடைகளை மூடச் சொல்லி காய்கறிகளை எடுத்து வீசினர்.
இதையடுத்து அவையும் மூடப்பட்டுவிட்டன.
ஏராளமான இடங்களில் சாலைகளில் டயர்களை எரித்துப் போட்டும் போராட்டங்கள் நடந்தன.
டிவி சேனல்களுக்குத் தடை:
அதே
போல பந்த் தினத்தன்று பொழுதுபோக்கு-கேளிக்கை நிகழ்ச்சிகள் எதையும்
மக்கள் பார்க்க அனுமதிக்கக் கூடாது என்று கன்னட அமைப்புகள் கூறியதையடுத்து
கர்நாடகம் முழுவதும் செய்தி சேனல்கள் தவிர மற்ற அனைத்துச் சேனல்களையும்
கேபிள் ஆபரேட்டர்கள் இன்று காலை முதல் ஒளிபரப்பவில்லை.
இதனால் கன்னட,
இந்தி, ஆங்கில செய்தி சேனல்கள் மட்டுமே ஒளிபரப்பாயின. டிஷ் டிவிக்களை
வைத்திருந்தவர்களுக்கு பாதிப்பில்லை. கேபிள் டிவி மட்டுமே உள்ளவர்கள்
'மண்டை காய்ந்து' போயினர். இவர்கள் செய்தி சேனல்கள் தவிர லோக்சபா டிவி,
ராஜ்யசபா போன்ற சேனல்களையே பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஆனால், பெங்களூருக்கும், பெங்களூரில் இருந்தும் விமானங்கள் வழக்கம்போல் இயங்குகின.
இன்று நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளையும் கல்லூரிகள் ரத்து செய்துவிட்டன.
இந்த
பந்த் தமிழர்களுக்கு எதிரான போராட்டமாக மாறிவிடக் கூடாது என்ற அச்சம்
தமிழர்களிடையே நிலவியது. பந்த்தையொட்டி பெங்களூரில் தீவிர பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மைசூர் விப்ரோ அலுவலகத்தில் தாக்குதல்:
மைசூரில்
உள்ள விப்ரோ அலுவலகத்துக்குள் புகுந்த சிலர் கண்ணாடிகளை அடித்து
உடைத்தனர். இதையடுத்து அங்கிருந்த ஓரிரு பணியாளர்களும் அலறியடித்துக்
கொண்டு வெளியேறினர்.
அதே போல பெங்களூரில் இயங்கிய ஒரு
கால்சென்டருக்குள் நுழைந்த கன்னட அமைப்பினர் பெரும் கலாட்டாவில்
ஈடுபட்டனர். இதையடுத்து அந்த கால்சென்டர் உடனடியாக மூடப்பட்டது.
அதே போல பெங்களூரில் ஒரு விப்ரோ அலுவலகத்துக்குள்ளும் நுழைந்து சிலர் கலாட்டாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை வெளியேற்றினர்.
தமிழர்கள்
அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் பதற்றமான பகுதிகளிலும் போலீசார்
குவிக்கப்பட்டிருந்னர். இந்தப் பகுதிகளில் தீவிர ரோந்து நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஓசூர் ரோட்டில் தான் மிக அதிகமான போலீசார்
பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பெங்களூரில் மட்டும்
17.000 போலீசாரும், 3 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும்,
அதிரடிப் படையினரும், 25 பிளாட்டூன் கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையினரும்,
35 பெங்களூர் ரிசர்வ் போலீஸ் படை பிளாட்டூன்களும் பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டனர்.
பந்த்தையொட்டி இன்று தமிழகத்திலிருந்து எந்தப்
பேருந்தும் பெங்களூருக்கோ, கர்நாடகத்தின் மற்ற நகரங்களுக்கோ
இயக்கப்படவில்லை. தமிழக பஸ்கள் ஒசூரிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன. அதே போல
கர்நாடக அரசின் கே.எஸ்.ஆர்.டி.சி கழகப் பேருந்துகள் இன்று முழுவதுமாகவே
இயக்கப்படவில்லை.
ஒசூர்-பெங்களூர் இடையே தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.
கன்னட சினிமா துறையினர் போராட்டம்:
பெங்களூர்
சிவானந்தா சர்க்கிளில் கன்னட திரைப்படத் துறையினர் போராட்டத்தில்
ஈடுபட்டனர். நடிகர்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ராகவேந்திர
ராஜ்குமார், உபேந்திரா, ஜக்கேஷ், நடிகை பூஜா காந்தி உள்ளிட்டோர் தர்ணா
நடத்தினர். அதே போல நடிகர் அம்பரீஷும் தர்ணா போராட்டம் நடத்திவிட்டு
பின்னர் ஆளுநர் பரத்வாஜை சந்தித்து மனு அளித்தார்.
வட மாவட்டங்களில் ஆதரவில்லை:
காவிரி
நதி பாயும் மாண்டியா, மைசூர், சாம்ராஜ்நகர், தமிழகத்தை ஒட்டியுள்ள
பெங்களூரில் பந்த் முழு அளவில் நடந்தாலும் கர்நாடகத்தின் வட மாவட்டங்களான
காடக், ஹவேரி ஆகியவற்றில் பந்துக்கு ஆதரவே இல்லை. அதே போல மங்களூர்,
பெல்காம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இயங்கின.
ஷிமோகா
நகரில் முன்னாள் முதல்வர் எதியூரப்பாவுக்குச் சொந்தமான நட்சத்திர ஹோட்டல்
திறந்திருந்தது. கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் உள்ளே புகுந்து கலாட்டா
செய்ததையடுத்து ஹோட்டல் மூடப்பட்டது.
அதே நேரத்தில் எதியூரப்பா பெங்களூர் மெளரியா சர்க்கிளில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இந் நிலையில் இன்று பாஜக எம்பி அனந்த்குமார் தலைமையிலான குழு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவுள்ளது.
Comments