திருவண்ணாமலை: ""மதுரை ஆதீனத்துக்கு, என்னாலோ, என் சீடர்களாலோ எந்தவித
பாதிப்பும் ஏற்படாது,'' என, நித்யானந்தா கூறினார்.இளைய ஆதீனம் பதவியில்
இருந்து நித்யானந்தாவை நீக்கி, நேற்றிரவு மதுரை ஆதீனம் உத்தரவிட்டார்.
இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா ஆஸ்ரமத்தில்,
நித்யானந்தா,
தனது சீடர்களுடன், நவராத்திரி பண்டிகை கொண்டாடிக்
கொண்டிருந்தார்,பின் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:நானும்,
சன்னிதானமும் (மதுரை ஆதீனம்), இன்றோ (நேற்று<) அல்லது நாளையோ (இன்று)
கூட்டாக இணைந்து, என்னுடைய இளைய ஆதீன பதவியை ராஜினாமா செய்ய
திட்டமிட்டிருந்தோம்.இந்நிலையில், அவர் என்னை நீக்கிவிட்டார் என்று நீங்கள்
கூறிய பிறகு தான் எனக்கு தெரிய வருகிறது. ஒரு வேளை, எனக்கு தகவல் அனுப்பி,
அது எனக்கு வந்து சேரவில்லை என, நினைக்கிறேன்.இளைய ஆதீன பொறுப்பிலிருந்து
என்னை நீக்கியதில், எனக்கு எந்தவித மன வருத்தமும் இல்லை, எந்தவிதமான
பாதிப்பும் இல்லை. மதுரை ஆதீனத்திலிருந்து, என்னுடைய சீடர்கள்
வெளியேற்றப்படவில்லை, அவர்களாகவே வெளியேறி வந்து
கொண்டிருக்கின்றனர்.சன்னிதானம், மதுரை ஆதீனத்துக்கு சொந்தக்காரர், நான்
நித்யானந்த பீடத்திற்கு சொந்தக்காரர். என்னாலோ, என் சீடர்களாலோ, அவருக்கு
எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அவர் மீது அன்பு, மரியாதை, பக்தி எங்களுக்கு
உண்டு. அவர், என் தந்தையை போன்றவர். இவ்வாறு அவர் கூறினார்.
Comments