செம்மண் கொள்ளை- முன்ஜாமீன் மறுப்பால் வெளியே வந்த பொன்முடியை தூக்கியது போலீஸ்!

 Red Sand Scam Former Dmk Minister Ponmudi Arrested விழுப்புரம்: செம்மண் குவாரியில் அனுமதித்த அளவுக்கு அதிகமாக மண் அள்ளிய புகாரில் பல நாட்களாக தலைமறைவாக இருந்த திமுகவின் முன்னாள் அமைச்சர் க. பொன்முடி இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகெ செம்மண் குவாரி நடத்திய பொன்முடி, அனுமதித்த அளவுக்கு அதிகமாக மண் அள்ளியதாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் க. பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து
மகனுடன் பொன்முடி தப்பி ஓடி தலைமறைவானார். தொடர்ந்தும் அவர் தலைமறைவாக இருந்தார். ஆந்திர மாநிலத்தில் உள்ள அவரது மாமியார் ஊரில் பொன்முடி பதுங்கி இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பொன்முடி, அவரது மகன் கவுதசிகாமணி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு நேற்று நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து பொன்முடி சரணடைய வேண்டிய நிலை உருவானது.
இதனால் வெளியே வந்த பொன்முடி இன்று காலை செஞ்சியில் நடைபெற்ற திமுகவினரின் துண்டு பிரசுரம் விநியோகிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் விழுப்புரத்துக்கு சென்றார். அங்கு அவரை போலீசார் செம்மண் கொள்ளை வழக்கில் கைது செய்தனர்.
பின்னர் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொன்முடியை வரும் 19ம் தேதி வரை கடலூர் சிறையில் அடைக்க நீதிபதி கயல்விழி உத்தரவிட்டார்.
அதிகாரிகளை கட்டாயப்படுத்தி பொய் வழக்கு:
முன்னதாக விழுப்புரம் நகர திமுக அலுவலகத்தில் பொன்முடி நிருபர்களிடம் கூறுகையில், அதிமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வினியோகிக்க திமுக தலைவர் கருணாநிதி உத்தரவிட்டார். அதன்படி இன்று செஞ்சி, விழுப்புரத்தில் நான் துண்டு பிரசுரங்களை வினியோகித்தேன். அதிமுக ஆட்சியில் ஜனநாயகம் சவக்குழிக்கு தள்ளப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் குரல்வளை நெரிக்கப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. மின்தடை அதிகரித்துள்ளது. இந்த ஆட்சியில் `ம்' என்றால் வழக்கு. `ஏன்?' என்று கேட்டால் சிறைவாசம். அதிகாரிகைள கட்டாயப்படுத்தி என் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றார்.
கிரானைட் வழக்கும் பாயும்:
இந் நிலையில் கடந்த ஆட்சியில் கிரானைட் உரிமையாளர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக பொன்முடி மீது புகார்கள் உள்ளதால், இவர் மீது கிரானைட் வழக்கும் பாயலாம் என்று தெரிகிறது.

Comments