நாளை கூடங்குளத்தாரின் கோட்டை முற்றுகைப் போராட்டம்.. உஷாராகிறது போலீஸ்

 Anti Kknpp Group Siege St George Fort Tomorrow சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் போராட்டக் குழுவினர் நாளை புனித ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து சென்னையில் போலீஸார் பெரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும், அணு உலையில் யுரேனியம் நிரப்பக் கூடாது என்பதை வலியுறுத்தியும் போராட்டக் குழுவினர் 29ம் தேதி சட்டசபையின் வைர விழாக் கூட்டம் நடக்கும் நாளில், தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்தனர்.

இதற்கு, மதிமுக, பாமக, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழர் வாழ்வுரிமை கட்சி, பழ.நெடுமாறனின் உலகத் தமிழர் பேரவை, திராவிட விடுதலைக் கழகம், தமிழர் தேசியக் கட்சி, மீனவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதையடுத்து சென்னை முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தலைமைச் செயலகம் செல்லும் சாலையை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அங்கு விடிய விடிய தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போராட்ட குழுவினர் பல நாட்களுக்கு முன்னதாகவே சென்னைக்குள் வந்து உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தங்கியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிப்பதால், கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள், பஸ்களையும் போலீசார் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். சென்னை நகர் முழுவதும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் பகுதியில் 2 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடி நின்றால் அவர்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கமிஷனர் ஜார்ஜ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் டிஜிபி ராமானுஜம் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள போலீஸாருடன், தமிழ்நாடு சிறப்புக் காவல்படை, ஆயுதப்படை, அதிவிரைவுப் படை, கமாண்டோ படை, கலவரத்தை ஒடுக்கும் சிறப்பு போலீசார் என்று கூடுதலாக வரவழைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

போராட்டம் நடந்து விடாமல் தடுப்பது மட்டுமல்லாமல், அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டு விடாமல் தவிர்ப்பதிலும் போலீஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனராம்.

Comments