உருவானது முதல் புயல் 'நிலம்' .. சென்னை அருகே நாளை மாலை கரையைக் கடக்கிறது

 Expected Cyclone Be Named Nilam சென்னை: சென்னைக்கு அருகே 500 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருவெடுத்து நாளை கரையைக் கடக்க உள்ளது. நிலம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்புயல் சென்னைக்கு தெற்கே மகாபலிபுரம் பகுதியில் கரையைக் கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாபலிபுரம் அருகே கரையைக் கடக்கும்

வங்கக் கடலில் மையம் கொண்டிருக்கும் நிலம் புயலானது தென்கிழக்கில் இருந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நாளை பிற்பகலில் இருந்து மாலைக்குள் சென்னைக்கு தெற்கே கரையைக் கடக்கும்.
அதாவது சென்னைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே அனேகமாக மகாபலிபுரம் அல்லது கல்பாக்கம் கடற்பரப்பில் புயல் கரையைக் கடக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.,
இப்புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
7ம் எண் புயல் கூண்டு
'நிலம்' புயலால் சென்னை துறைமுகத்தில் 7-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, கடலூர், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தூத்துக்குடி துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டிருக்கின்றன.
புயல்களுக்குப் பெயர் பிறந்த கதை

குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்போது புயல்களுக்கும் சூப்பராக பெயர் சூட்ட ஆரம்பித்து விட்டனர். ஆனால் இது இன்று நேற்று நடப்பதல்ல. கடந்த 1945ம் ஆண்டு முதலே புயல்களுக்குப் பெயர் சூட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு பிராந்தியத்திற்கேற்ப அந்தந்தப் பகுதிகளில் உள்ள நாடுகள் இணைந்து இந்த பெயர்களைச் சூட்டி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து, மியான்மர், ஓமன், ஆகிய நாடுகள் இணைந்து பெயர்களை முடிவு செய்கின்றன. இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றாக சூட்டப்பட்டு வருகின்றன.
கடைசியாக முர்ஜான் என்ற புயல் இப்பிரதேசத்தைத் தாக்கியது. இதப் பெயரை வைத்த நாடு ஓமன். இந்தப் புயல் அரபிக் கடலில் உருவாகி சோமாலியா பகுதியில் கரையைக் கடந்தது.
நிலம் - பாகிஸ்தான் புயல்
இந்த சீசனில் முதல் முறையாக இந்தியப் பகுதியில் ஒரு புதிய புயல் உருவாகி இருக்கிறது, வங்கக் கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக உருவெடுத்திருக்கிறது. இப் புயலுக்கு நிலம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பெயரை சூட்டிய நாடு பாகிஸ்தான் ஆகும்.
அடுத்த புயல் வரும்போது அதற்கு மகாசேன் என்று பெயர் சூட்டப்படும். இந்தப் பெயரை சூட்டிய நாடு இலங்கை.

Comments