தமிழகத்தை ஆட்டிப்படைக்கிறது டெங்கு.. பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது

 Dengue Fever Spreads Tamil Nadu சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, சென்னை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இது வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 21 பேருக்கு சென்னையில் டெங்கு பரவியுள்ளது. மதுரையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெங்கு காய்ச்சல் காரணமாக சென்னை மருத்துவமனைகளில் பலரும் அட்மிட் ஆகி வருகின்றனர். சிலர் இறந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற
தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் யாரும் இறக்கவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த 10 நாட்களில் மட்டும் 21 பேருக்கு டெங்கு ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்துள்ளனர்.
டெங்கு பரவலைத் தடுக்க ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர், அதிகாரிகள் கூட்டம் நடந்துள்ளது. சென்னை மாநகராட்சியும் டெங்கு்ப பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
செவ்வாய், வியாழக் கிழமைகளில் 200 வார்டுகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. வீட்டைச் சுற்றி தண்ணீர் தொட்டி, தேங்காய் ஓடு, குளிர் சாதனப் பெட்டி, டயர், வாளி, ஆட்டுக்கல் குழவி ஆகியவற்றில் தேங்கி நிற்கும் நீரிலிருந்து, ஈடிஸ் வகை கொசு உற்பத்தியாகிறது. இந்தக் கொசுக்கள்தான் டெங்கு காய்ச்சலுக்குக் காரணம். எனவே இப்படி தண்ணீர் தேங்காமல் கவனமுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சென்னையில் குலாம் நபி ஆசாத் ஆலோசனை
இதற்கிடையே டெங்கு பரவல்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. அதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கலந்து கொள்கிறார்.
இக்கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
மதுரையில் 3 பேர் பலி
மதுரையில் பரவிய டெங்குக் காய்ச்சலுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூரிலும் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அங்கு சிலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுவை யூனியனுக்குட்பட்ட காரைக்காலிலும் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது இதுவரை அங்கு 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Comments