'சினிமா பள்ளி' தொடங்குகிறார் கமல்!

Kamal Start School Artists சென்னை: சினிமா கலைஞர்களுக்கென ஒரு பயிற்சிப் பள்ளியைத் தொடங்குகிறார் நடிகர் கமல்ஹாஸன்.
சினிமாவின் அனைத்து துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர் கமல் ஹாஸன். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் சிரமங்களை அறிந்தவர் என்பதால், முடிந்தவரை அவர்களின் நலனுக்கு தன்னாலானதைச் செய்து வருகிறார்.
இப்போது சினிமா கலைஞர்களுக்கு பயிற்சி பள்ளி தொடங்கும் திட்டத்தை
செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இளம் தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை மேம்படுத்துவதற்காக சென்னையில் பயிற்சி பள்ளி ஒன்றை தொடங்க கமலஹாசன் முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் நடந்த பிக்கி மாநாட்டில் கமல் கூறுகையில், "நான் சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிகராக வேண்டும் என்று விரும்பினேன். அப்போது நடிப்பு பயிற்சி எடுத்துக்கொள்ள இடங்களோ, வசதிகளோ கிடையாது.
ஆனால் இப்போது அதற்கான வசதிகள் பிரமிக்கத்தக்க வகையில் பெருகிவிட்டன. நடிப்பு பயிற்சிக்காக ஏராளமான பள்ளிகள் உள்ளன.
அதே சமயத்தில் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள், சண்டை கலைஞர்கள் மற்றும் திரைக்கு பின்னால் கடினமான பணிகளை செய்பவர்கள், இவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க பள்ளிகள் கிடையாது.
எனவே அப்படிப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஒரு பள்ளியை தொடங்க முயற்சி எடுத்து வருகிறோம். இதுகுறிப்பாக இளம் தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்," என்றார்.

Comments