தமிழகத்தின்
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் எதிலுமே ஒற்றுமையைக் காட்டுவதில்லை தமிழக
அரசியல் கட்சிகள். இது நீண்ட நாட்களாக தமிழக மக்களின் மனதில் குமுறிக்
கிடக்கும் பெரும் வருத்தம். தமிழகத்தின் உயிர் நாடிப் பிரச்சினைகளில் கூட
இந்த பாழாய்ப் போன கட்சிகள் ஒற்றுமையாக செயல்படுவதில்லை. இத்தனை கட்சிகளும்
நம்மிடம்தானே ஓட்டு வாங்குகின்றன. ஆனால் நமக்காக சேர்ந்து போராட
மறுக்கிறார்களே என்ற ஆதங்கம் பன்னெடுங்காலமாக மக்களை வாட்டி வதைத்துக்
கொண்டுதான் உள்ளது. ஆனால் விமோச்சனம்தான் இல்லை.
எல்லாவற்றுக்கும்
காரணம் வெற்று ஈகோதான். எங்கே அவர்களைச் சேர்த்துக் கொண்டு போனால்
அவர்களுக்கும் பெயர் கிடைத்து விடுமோ என்று இவர்களும், இவர்களையெல்லாம்
சேர்க்க மாட்டேன், நானேதான் எல்லாவற்றையும் செய்வேன், எனக்கேதான் எல்லாப்
பெயரும் வர வேண்டும் என்று அவர்களும் மாறி மாறி தத்தமது ஈகோவைக்
காட்டத்தான் முமமுரமாக இருக்கிறார்களே ஒழிய ஒட்டுமொத்தமாக திரண்டு போய்
டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் ஒன்று நொடி கூட நினைத்துப்
பார்ப்பதில்லை.
இப்போதும் கூட காவிரிப் பிரச்சினைக்காக கர்நாடகத்தில்
நடக்கும் காட்சிகளைப் பார்க்கும்போது பேசாமல் நாமும் கன்னடர்களாக
பிறந்திருக்கலாம், நமக்காக குரல் கொடுகக நாலு அரசியல்வாதிகள் வருவார்கள்,
நமக்காக துடிப்பார்கள் என்ற எண்ணம் ஒவ்வொரு காவிரி பாசனப் பகுதி
விவசாயிக்கும் நிசசயம் வரும். அப்படி ஒரு கட்டுக்கோப்பான, ஒற்றுமையான
போக்கை கர்நாடகத்தில் கடைப்பிடிக்கிறார்கள்.
அங்கு யார் ஆட்சியில்
இருந்தாலும் சரி, காவிரிப் பிரச்சினையா அல்லது மகாராஷ்டிராவுடனான எல்லைப்
பிரச்சினையா உடனே அத்தனை பேரையும் கூட்டி வைத்து அனைத்துக்கட்சிக்
கூட்டத்தைக் கூட்டி விடுகிறார்கள். முதல்வர் ஒரு கட்சியாக இருப்பார்,
எதிர்க்கட்சி வேறு கட்சியாக இருக்கும். ஆனால் அனைவருமே கூடி உட்கார்ந்து
பேசி ஒருமித்த முடிவை எடுக்கிறார்கள். பின்னர் அனைவரும் சேர்ந்து
டெல்லியில் தங்களுக்குள்ள பலத்தைப் பிரயோகித்து தங்களது மாநில நலனுக்காக
கடுமையாக போராடுகிறார்கள்.
அமெரிக்காவுக்குப் போன எஸ்.எம்.கிருஷ்ணா,
அங்கிருந்தபடியே பிரதமரைக் கூப்பிட்டு தண்ணீரை நிறுத்துங்கள் என்று குரல்
கொடுத்தார். உடனே இந்தியாவுக்குத் திரும்பி தனது மாநில காங்கிரஸ், பாஜக
எம்பிக்களோடு பிரதமரை சந்தித்திருக்கிறார்... என்ன ஒரு மாநிலப் பாசம்
பாருங்கள். இப்படித்தான் இருக்க வேண்டும் ஒரு மக்கள் பிரதிநிதி என்றால்.
தனக்காக வாக்களித்த, தான் நம்பி வாழும் மக்களுக்காக குரல் கொடுப்பவர்தான்
உண்மையான மக்கள் பிரதிநிதி.
அதேபோல நேற்று பிரதமரைப் போய் ஒட்டுமொத்த
கர்நாடக எம்.பிக்களும், மத்திய அமைச்சர்களும் போய்ப் பார்த்து
நெருக்குதல் கொடுத்துள்ளனர் - கட்சி பாரபட்சமின்றி. எஸ்.எம்.கிருஷ்ணா,
வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜூன கார்கே, கே.எச்.முனியப்பா தவிர பாஜகவின்
வெங்கையா நாயுடு, அனந்தகுமார் என அத்தனைத் தரப்பினரும் டெல்லியில்
முகாமிட்டு கலக்கி விட்டனர்.
ஆனால் தமிழகத்தைப் பாருங்கள். ஒரு
சத்தத்தையும் காணோம். தமிழகத்திலிருந்து மொத்தம் 9 மத்திய அமைச்சர்கள்
உள்ளனர். அவர்களில் 3 பேர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். 5 பேர் திமுகவைச்
சேர்ந்தவர்கள். நாராயணசாமி புதுச்சேரியைச் சேர்ந்தவர், இதுவும் காவிரிப்
பாசன மாநிலம்தான்.
ஆனால் இந்த 9 பேரும் இதுவரை ஆக்கப்பூர்வமாக ஒரு
முறை கூட தமிழகத்திற்காக குரல் கொடுக்கவில்லை. நாராயணசாமியாவது அவ்வப்போது
எதையாவது கூறி வந்தார். ஆனால் மற்றவர்கள் வாயே திறக்காமல் கமுக்கமாக
உள்ளனர். ஏன் என்று தெரியவில்லை.
காங்கிரஸ் அமைச்சர்களை விடுங்கள்,
அவர்கள் ஏதாவது பேசினால் அம்மாவுக்குக் கோபம் வந்து விடும். பின்னால்
கூட்டணி அமைக்க முயலும்போது பிரச்சனை வரும்.
திமுக ஏன் பிரதமரை நெருக்காமல், டெல்லியில் லாபி செய்யாமல் அமைதியாக இருக்கிறது என்றுதான் புரியவில்லை.
அதை
விட மோசம் தமிழக அரசின் போக்கு.இதுவரை ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்
கூட தமிழக அரசு நடத்தவில்லை. எவ்வளவு பெரிய மெத்தனமான போக்கு இது. அத்தனைக்
கட்சிகளையும் கூப்பிட்டு உட்கார வைத்து அடுத்து என்ன செய்யலாம்,
டெல்லியில் எப்படியெல்லாம் நெருக்குதல் தரலாம் என்று ஒரு முறை கூட தமிழக
அரசு ஆலோசித்ததில்லை.
முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி,
விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், வைகோ, திருமாளவன், கி.வீரமணி என தமிழகத்தின்
அத்தனை தலைவர்களும் ஒரே நாளில் டெல்லியில் போய் உட்கார்ந்து ஒரு
போராட்டத்தை நடத்தினால் எப்படியிருக்கும்... கற்பனை பண்ணிப் பார்த்தாலே
எவ்வளவு பிரமாண்டமாக தெரிகிறது. ஆனால் ஒருமுறை கூட இந்த சக்தியை அவர்கள்
பயன்படுத்திப் பார்க்க மறுக்கிறார்கள்.
இப்படி இவர்களின் ஈகோவில்
சிக்கித் தவித்து புழுங்கிச் செத்துக் கொண்டிருக்கிறார்கள் காவிரிப் பாசனப்
பகுதி விவசாயிகள். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரி
பாசனப் பகுதியில் தற்போது அரிசி அதிக விலைக்கு விற்கிறது என்ற அதிர்ச்சிச்
செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகியபோது அனைவருமே அதிர்ந்து
போனார்கள்.
ஈகோக்களை விட்டு விட்டு நம்மை நம்பியுள்ள விவசாயிகளுக்காக
ஒரு முறையாவது ஒருமித்து குரல் கொடுத்து, அந்த அப்பாவி விவசாயிகளுக்காக
துடிப்புடன் செயல்பட நம் அரசியல்வாதிகள், மத்திய அமைச்சர்கள் தயவு செய்து
முன்வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த நேரத்தில்
வாழப்பாடி ராமமூர்த்தி ஞாபகம்தான் நினைவுக்கு வருகிறது. காவிரிப்
பிரச்சினைக்காக துண்டைத் தூக்கி தூரப் போடுவது போல தனது மத்திய அமைச்சர்
பதவியை உதறி விட்டுப் போனவர் வாழப்பாடியார் என்பதை காவிரி பாசனப் பகுதி
மக்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள்.
Comments