மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படுவது பற்றி நீண்டகாலமாக
பேசப்பட்டு வந்தாலும் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெறும்
மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டும்,
ராகுல்
காந்தியின் ஆதரவாளர்களை முன்னிறுத்தியும் இந்த மாற்றம் இருக்கும் என்று
எதிர்பார்க்கப்பட்டது. இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறி
இருப்பதால் அம்மாநிலத்துக்கும் முக்கியத்துவம் வழங்கப்படலாம் என்று
சொல்லப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த மாணிக் தாகூர், மீனாட்சி நடராஜன்
ஆகியோரும் அமைச்சராகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த
எதிர்பார்ப்புகளில் எது நடந்தது? எது நிறைவேறவில்லை..
ஆந்திராவுக்கு 6 அமைச்சர்கள்
மொத்தம்
22 பேர் இன்று அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில் கேபினட்
அமைச்சர்கள் 7 பேர். இவர்களில் ஆந்திராவைச் சேர்ந்த பல்லம் ராஜூவும்
ஒருவர். இவர் ஏற்கெனவே இணை அமைச்சராக இருந்தவர்.
இன்றைய அமைச்சரவை
மாற்றத்தில் 2 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக பொறுப்பேற்றனர்.
இவர்களில் ஆந்திராவைச் சேர்ந்த நடிகர் சிரஞ்சீவியும் ஒருவர். ஆந்திர
மாநிலத்தில் பிரஜா ராஜ்ஜியம் என்ற ஒரு கட்சியை தொடங்கி செல்வாக்கை
நிரூபித்த கையோடு காங்கிரசில் ஐக்கியமானவர். நீண்டகாலமாக இப்ப
அமைச்சராவார், அப்ப அமைச்சராவார் என்று சொல்லப்பட்ட நிலையில் இன்று
வெற்றிகரமாக அமைச்சராகிவிட்டார்.
இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்கள்
மொத்தம் 13 பேர். இவர்களில் ஜெய சூர்ய பிரகாஷ் ரெட்டி, சத்யநாரயணா,
பல்ராம் நாயக், கிருபாராணி ஆகிய 4 பேரும் ஆந்திர மாநிலத்தைச்
சேர்ந்தவர்கள். இதில் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர் பல்ராம் நாயக்.
ஆந்திராவுக்கு முக்கியத்துவம் ஏன்?
ஆந்திர
மாநிலத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக இருந்தாலும்
ஜெகன் மோகன் ரெட்டியின் பிரிவும் தெலுங்கானா விவகாரமும் அக்கட்சியின்
எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இம்மாநிலத்தில் விரைவில்
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் கட்சிக்கு புத்துயிர்அளிக்க
வேண்டிய நிலை காங்கிரசுக்கு இருக்கிறது. இதனால்தான் ஆந்திர மாநிலத்துக்கு
பம்பர் பரிசைப் போல் 6 அமைச்சர்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டிருக்கின்றனர்.
ராகுல்காந்தி ஆதரவாளர்கள்
மத்திய
அமைச்சரவையில் இணை அமைச்சர்களாக இருக்கும் ராகுல் காந்தி ஆதரவாளர்கள்
கேபினட் அமைச்சர்களாக்கப்படுவர் என்று தொடர்ந்து கூறப்பட்டு வந்தது.
இதேபோல் ராகுல்காந்தியே அமைச்சராவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அஜய்
மகேன் மற்றும் பல்லம் ராஜூ ஆகியோரை ராகுல்காந்திதான் பரிந்துரைத்தார்
என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள். ராகுல்காந்தி ஆதரவாளர்கள் கட்சிப்
பணிகளில் தீவிரம் காட்ட உத்தரவிடப்படும் என்று கூறப்படுகிறது. ராகுல்
ஆதரவில் தமிழகத்தின் மாணிக் தாகூர் மற்றும் மீனாட்சி நடராஜன் ஆகியோர்
அமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என்று கூறபட்டது. ஆனால் இருவருக்கும்
வாய்ப்பு இல்லை.
மேற்கு வங்கம்
மத்திய
அரசிலிருந்து மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் வெளியேறிவிட்ட
நிலையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஏ.கே.கான் செளத்ரி மற்றும் தீபா
முன்ஷி ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி
இருந்தது. அமைச்சரவை மாற்றத்தில் எதிர்பார்த்தபடியே இருவருக்கும் பதவி
கிடைத்திருக்கிறது. இருவரும் இணை அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்!
தமிழகம் புறக்கணிப்பு
மத்திய
அமைச்சர்களாக இருந்த ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் ஸ்பெக்ட்ரம் ஊழல்
வழக்கில் ராஜினாமா செய்தனர். அதனால் காலியான இடங்களில் திமுகவினரை மீண்டும்
நியமிப்பதில் அக்கட்சி ஆர்வம் காட்டவில்லை. இதனால் என்னவோ தமிழகத்துக்கு
ஒரு அமைச்சர் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments