கர்நாடகத்தைக் கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல்- ஆயிரக்கணக்கானோர் கைது

தஞ்சாவூர்: காவிரியில் தமிழகத்திற்கு 2 டிஎம்சி தண்ணீர் திறந்து விடக் கோரி காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை, நாகை. திருவாரூர் மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்மாநில விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று இப்போராட்டம் நடந்தது.


தஞ்சை ரயில் நிலையத்தில் இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் போராட்டம் நடந்தது.மயிலாடுதுறை-திருச்சி பாசஞ்சர் ரயிலை மறித்தனர். இதில் தா.பாண்டியன், மாவட்ட செயலாளர் திருஞானம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் கும்பகோணத்தில் மயிலாடுதுறை-நெல்லை பாஸ்ட் பாசஞ்சர் ரயிலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறித்து போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் ரயில் நிலையத்தில் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. அவர்கள் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

மன்னார்குடி ரயில் நிலையத்தில் மன்னார்குடி- மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலை முன்னாள் எம்.எல்.ஏ சிவபுண்ணியம் தலைமையில் மறித்தனர். இதில் 150 பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

நாகை ரயில் நிலையத்தில் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர். மத்திய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு தலைமையில் நடந்த மறியலில் இந்திய கம்யூ. கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர் நல்லக்கண்ணு உள்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- நெல்லை பாசஞ்சர் ரயிலை ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. பொன்னுபாண்டியன் தலைமையில் மறித்துப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 200க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
சீர்காழியில் குடியாத்தம் எம்.எல்.ஏ. லிங்கமுத்து தலைமையினர் இந்திய கம்யூ.கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

Comments