நீங்க குடிக்கிற பால் முக்கால்வாசி கலப்படமாம்!

டெல்லி: குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை குடிக்கும் பால் சுத்தமானது இல்லை கலப்படமானது என்ற வெடிகுண்டைத் தூக்கி வாயில் போட்டுள்ளது மத்திய அரசு.

பெயிண்ட் பால்.. யூரியா பால்

யூரியா, சலவை பொருள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், கார சோடா, வெள்ளை பெயின்ட் என்று பலவிதமான பொருட்களும் பாலில் கலப்படம் செய்யப்படுகிறது.
மேலும் செயற்கையான பால் தயாரிக்கப்பட்டு தராளமாக விநியோகிக்கப்படுகிறது. இத்தகைய கலப்பட பாலை பயன்படுத்துவதால், பல்வேறு வகையான நோய்களுக்கு ஆளாகி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சுவாமி அச்சியுதானந்த் தீர்த் போட்ட வழக்கு

மக்கள் பயன்படுத்தும் பாலில், கலப்படம் உள்ளது. செயற்கை முறையிலும் பால் தயாரிக்கப்படுகிறது இதை பயன்படுத்துவோருக்கு பாதிப்பு ஏற்படும் என்று உத்தரகண்ட்டை சேர்ந்த, சுவாமி அச்சியுதானந்த் தீர்த் உள்ளிட்ட சில சமூக ஆர்வலர்கள், உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

டெஸ்ட் பண்ணுங்க.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதற்கு பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இதனையடுத்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சார்பில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் பால் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
ஆமாமா, 68% கலப்படம்தான்.. மத்திய அரசு ஆய்வில் பல அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்தன. நகர்ப்புறங்களில், தற்போது மக்கள் பயன்படுத்தும் பாலில், 68 சதவீத பால், கலப்படமாக உள்ளது. எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நிர்ணயித்துள்ள தர விதிமுறைகளை, பூர்த்தி செய்யும் வகையில், இந்த பால் இல்லை என்று தெரியவந்தது என மத்திய அரசு கூறியுள்ளது.

சோப் பவுடரெல்லாம் இருக்காம்

சில பாலில், குளுகோஸ், தண்ணீர் உள்ளிட்டவை, சேர்க்கப்படுகின்றன. பாலில் உள்ள அழுக்கை நீக்குவதற்காக, டிடெர்ஜென்ட் பவுடர்கள் சேர்க்கப்படுகின்றன.இவ்வாறு, மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

கடும் நடவடிக்கை எடுங்க 'அம்மா'..!

தமிழக முதல்வர் கலப்பட பாலை கண்டறியும் குழுவை உடனடியாக அமைத்து வாரம்தோறும் அனைத்து நிறுவனங்களிலும் சோதனை நடத்த வேண்டும். அவ்வாறு கலப்படம் செய்யும் நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பால் முகவர்கள் நலச்சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Comments