காவிரி: நாளை கர்நாடகா பந்த்.. மாநிலம் ஸ்தம்பிக்கப் போகிறது.. பெங்களூரில் பதற்றம்-பீதி

 Cauvery Row Security Beefed Up Tomorrow Karnataka Bandh பெங்களூர்: காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து நாளை கர்நாடகத்தில் பந்த் நடக்கவுள்ளது. இந்த பந்த் காரணமாக பெங்களூர் உள்பட மாநிலமே முழு அளவில் முடங்கவுள்ளது.
பந்துக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெட்ரோல் பங்குகள் இயங்காது.
அதே போல பெங்களூரில் அரசு பஸ்களும் முழு அளவில் இயங்காது என்றே தெரிகிறது. அரைகுறை சர்வீஸ்களே இருக்கும்.
அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்தால் அனைத்து பஸ்களும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைகள், வர்த்தக வளாகங்கள், மால்கள், தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். மார்க்கெட்டுகள் ஏதுவும் திறக்கப்படாது.
சனிக்கிழமை என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு வழக்கமான விடுமுறை இருக்கும். அதே நேரத்தில் அரசு அலுவலகங்கள் ஏதும் இயங்காது. ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விமானங்கள் வழக்கம்போல் இயங்கும் என்பதால் விமான நிலைய டாக்ஸிக்கள் இயக்கும் என்று அறிவித்துள்ளனர். ஆனாலும் ஏதும் அசம்பாவிதம் நடந்தால் அவையும் வாபஸ் பெறப்படும் என்றும் டாக்ஸி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
நாளை நடக்கவுள்ள அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்யுமாறு கல்லூரிகளுக்கு பெங்களூர் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பந்த் தமிழர்களுக்கு எதிரான போராட்டமாக மாறிவிடக் கூடாது என்ற அச்சம் தமிழர்களிடையே நிலவுகிறது.
பந்த்தையொட்டி பெங்களூரில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் பதற்றமான பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்படவுள்ளனர். இந்தப் பகுதிகளில் தீவிர ரோந்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
பெங்களூரில் மட்டும் 17.000 போலீசாரும், 3 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், அதிரடிப் படையினரும், 25 பிளாட்டூன் கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையினரும், 35 பெங்களூர் ரிசர்வ் போலீஸ் படை பிளாட்டூன்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
நாளை பந்த் நடக்கும்போது விதானசெளதா, கே.ஆர்.ரோடு, கே.ஜி. ரோடு, ஜே.சி.ரோடு, அம்பேத்கர் வீதி, பேலஸ் ரோடு, சேஷாத்ரி ரோடு போன்ற சாலைகளை வாகன ஓட்டிகள் தவிர்க்குமாறு பெங்களூர் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பந்த்தையொட்டி நாளை தமிழகத்திலிருந்து எந்தப் பேருந்தும் பெங்களூருக்கோ, கர்நாடகத்தின் மற்ற நகரங்களுக்கோ இயக்கப்படாது.

Comments